பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி என்கிற டிடிக்கு கால் உடைந்த நிலையிலும் ரம்ஜானுக்காக ரிஸ்க் எடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு அமர்ந்தபடி நடனம் ஆடி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிடி அமர்ந்தபடி நடனம் ஆடியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காஃபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான திவ்யதர்ஷினி என்கிற டிடி தனது அழகான கனிவான பேச்சின் மூலம் விரைவிலேயே முன்னணி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக எழுந்தார். தொடர்ந்து வெற்றிகரமான தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி ப. பாண்டி, விசில், நள தமயந்தி, சர்வம் தாள்மயம் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தில் டிடிக்கு இடது முழங்காலில் முறிவு ஏற்பட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் நெட்டின்கள் பலரும் விரைவில் டிடி குணமடைய வேண்டும் என்று தெரிவித்தனர்.
கொரோனா பொது முடக்கம் அமலில் இருந்தாலும், இன்று நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தொகுப்பாளினி டிடிக்கு கால் உடைந்திருந்தாலும், ரம்ஜான் பண்டியையொட்டி, ரிஸ்க் எடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜோத்தா அக்பர் படப் பாடலுக்கு அமர்ந்தபடி நடனம் ஆடி உலம் முழுவதும் உள்ள முஸ்லிம் ரசிகர்கள் நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ குறித்து டிடி குறிப்பிடுகையில், “உலகெங்கிலும் உள்ள எனது முஸ்லீம் நண்பர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக் வாழ்த்துகள். நம்மை உங்களுடைய பிரார்த்தனையில் வைத்திருங்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாஅன ஜோத்தா அக்பர் பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.
நேற்று மட்டும் கால் கட்டை அகற்றிவிட்டேன். அதனால், எனக்குள் இருக்கும் கடினத்தை மனதில் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றோரு வீடியோவில் பேசியுள்ள டிடி, “உலகெங்கிலும் உள்ள என்னுடைய அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். ஏ.ஆர்.ரஹ்மானுடைய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் ஒன்று. இந்த பாடல் கடவுளுக்கு நெருக்கமாக என்னை உணரவைக்கும். நீங்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும் அது கடவுளுக்கு நெருக்கமாக இருக்க வைக்கும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எல்லா இஸ்லமிய நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள். இந்த உலகத்திற்கு என்றைக்கும் அதிகமான அன்பு அவசியம் தேவைப்படுகிறது. ஈத் முபாராக், நண்பர்களே எல்லோரும் எனக்கு கொஞ்சம் பிரியாணி கொடுத்துவிடுங்க 6 மீட்டர் தூரத்தில் இருந்து வாங்கிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
டிடியின் இந்த வீடியோவைப் பார்த்த அவருடைய ரசிகர்கள், நெட்டிசன்கள் என அனைவரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறி அவருக்கு ரம்ஜான் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.