scorecardresearch

மார்பகங்களை பெரிதாக்கச் சொன்னார்கள் – சில நடிகைகளின் கதைகள்

வாய்ப்பு கிடைப்பதாக இருந்தால் என்னுடைய திறமைக்காக கிடைக்கட்டும் என்று எல்லா அறிவுரைகளையும் புறக்கணித்துவிட்டேன்

பாபு:

தயாரிப்பாளர்களின் கவனத்தைப் பெற மார்பகத்தை செயற்கையாக பெரிதாக்கிக் கொள் என்று பலரும் தனக்கு அறிவுரை கூறியதாக தீபிகா படுகோனே கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது. அவர்களுக்கு தெரிந்த தீபிகா படுகோன் இந்தியின் முன்னணி நடிகை. ஹாலிவுட்டின் பிரமாண்ட படத்தில் நடித்தவர். இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். ஆனால், இதே தீபிகா ஒருகாலத்தில் யாராலும் அறியப்படாத ஒரு சராசரி இளம்பெண் என்பதை நினைவில் கொண்டால் அதிர்ச்சியின் அளவு குறையும்.

தீபிகா மட்டுமில்லை, முன்னணியில் உள்ள – வாரிசு நடிகைகள் நீங்கலாக அனைத்து நடிகைகளும் புறக்கணிப்பு, அவமானம் என பலவற்றையும் எதிர்கொண்டே இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள்.

வித்யா பாலன் ஏன் தமிழில் நடிப்பதில்லை?

வித்யா பாலன் தமிழ் சினிமாவில் நடிக்கவே முயற்சி செய்தார். நீங்க ரொம்ப குள்ளம், நாயகிக்குரிய உடல்கட்டு இல்லை என்று தமிழ் சினிமா அவரை புறக்கணித்தது. கடைசியில் ஒரு படத்தில் கமிட்டானார். படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், உங்களுக்கு நடிக்கத் தெரியலை என்று படத்திலிருந்து வெளியேற்றினார்கள். அதன் பிறகு போராடி இந்தி சினிமாவில் உயரிய இடத்துக்கு வந்தார். தன்னை அவமானப்படுத்திய தமிழ் சினிமாவில் நடிப்பதில்லை என்று முடிவு செய்ததன் காரணமாக ரஜினியுடன் கபாலியில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பையும் புறந்தள்ளினார். இதேபோல் பல வாய்ப்புகள். ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பையே வேண்டாம் என்று சொன்னார் என்றால், அவர் எந்தளவுக்கு ஆரம்பகாலத்தில் பாதிக்கப்பட்டிருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.

நடிகை வித்யாபாலன்
நடிகை வித்யாபாலன்

ப்ரியங்கா சோப்ரா இன்று முன்னணி நடிகை. உலகம் அறிந்த நடிகை என்பதே சாலப்பொருத்தம். குவாண்டிகோ சீரியல் அவரை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்திருக்கிறது. ஆஸ்கர் விருது விழாவில் ப்ரியங்கா தொடர்ச்சியாக இடம்பெறுகிறார். அந்தளவுக்கு ஹாலிவுட்டில் ஒரு இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.

அதே ப்ரியங்கா சோப்ராவுக்கு அதே அமெரிக்காவில் சின்ன வயதில் நடந்த நிகழ்வுகள் கசப்பானவை. ப்ரியங்கா அமெரிக்காவில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்தார். பள்ளியில் படிக்கையில் அவர் கருப்பு என சக மாணவர்களால் ஒதுக்கப்பட்டிருக்கிறார். அவரது காலில் இருந்த தழும்புகள் காரணமாக பெரிதும் கிண்டல் செய்யப்பட்டிருக்கிறார். இன்று ஏழு சர்வதேச பொருள்களுக்கு அவரது கால் மாடலாக உள்ளது. அதனை அவர் பெருமிதமாகக் கூறுகிறார். சின்ன வயதில் கிண்டல் செய்யப்பட்டு, ஒதுக்கப்பட்ட ப்ரியங்கா சோப்ரா இன்று ஆஸ்கர் விழாவில் விருது பெறுகிறவர்களின் பெயர்களை அறிவிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

 நடிகை ப்ரியங்கா சோப்ரா
நடிகை ப்ரியங்கா சோப்ரா

சினிமாவில் நடிப்பதற்கு முன் தீபிகா படுகோனும் இதேபோன்ற புறக்கணிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார். அதில் ஒன்றுதான் மார்பகத்தை பெரிதாக்கும்படி சொல்லப்பட்ட அறிவுரைகள். மார்பகத்தை மட்டுமில்லை வேறு பலவற்றையும் பெரிதாக்கச் சொன்னார்கள். ஆனால், வாய்ப்பு கிடைப்பதாக இருந்தால் என்னுடைய திறமைக்காக கிடைக்கட்டும் என்று எல்லா அறிவுரைகளையும் புறக்கணித்துவிட்டேன் என கூறியுள்ளார் தீபிகா படுகோன்.

முன்னணி நடிகைகளின் பின்னணிகள் கசப்பானவை, புறக்கணிப்புகளும், அவமானங்களும் நிரம்பியவை. தங்களது திறமையாலும், விடாமுயற்சியாலுமே அவர்கள் இப்போதைய உயரத்தை எட்டியிருக்கிறார்கள்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Deepika padukone i was advised to get a boob job