/indian-express-tamil/media/media_files/2025/09/19/download-55-2025-09-19-16-07-32.jpg)
நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் கடந்த ஆண்டு வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம், பெரும் வெற்றியைப் பெற்ற படமாக இருந்தது. இதில் பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து நடிகை தீபிகா படுகோன் நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த முடிவு திரையுலகில் பல சர்ச்சைகள் மற்றும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதற்குமுன், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவிருந்த பிரபாஸ் படத்திலிருந்தும் தீபிகா விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விலகியதற்கு காரணம்
'கல்கி' படத்தின் இரண்டாம் பாகத்துக்காக, தீபிகா படுகோன் தனது முதல் பாக சம்பளத்தில் இருந்து 25% அதிகரிப்பு கோரியதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், தினமும் வேலை நேரத்தை ஏழு மணிநேரமாக குறைக்க வேண்டும் என்பதையும் அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், படத்தில் மிகுந்த விஎஃப்எக்ஸ் வேலைகள் உள்ளதால், வேலை நேரத்தைக் குறைக்க முடியாது என தயாரிப்பாளர்கள் கூறி, அதற்கு பதிலாக சொகுசான கேரவன் வழங்க முடிவெடுத்ததாக பாலிவுட் ஹங்காமா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தீபிகாவுடன் பணியாற்றும் 25 பேரும் படப்பிடிப்பு தளத்திற்கு வருவார்கள் என்றும், அவர்களுக்கு உயர்தர உணவு மற்றும் வசதியான தங்குமிடம் வழங்க வேண்டும் என அவர் கோரியதாகவும், அந்த அளவிலான ஏற்பாடுகள் சாத்தியமில்லை என தயாரிப்பாளர்கள் தெரிவித்த பிறகும், தீபிகா தன் கோரிக்கையில் நிலைத்திருந்ததால் சர்ச்சை உருவானதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
'அனிமல்' பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, பிரபாஸை ஹீரோவாக வைத்து இயக்கவிருந்த 'ஸ்பிரிட்' படத்திலிருந்து நடிகை தீபிகா படுகோன் விலகிய செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தீபிகா முன்வைத்த பல கோரிக்கைகள் இயக்குநரின் அதிருப்திக்கு காரணமாகி, அதன் விளைவாகவே அவர் படத்திலிருந்து விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தினமும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தன்னுடைய படத்திற்கான சம்பளமாக இதுவரை கேட்டதிலேயே அதிகமான 20 கோடியை கோரியதுடன், படத்தின் லாபத்தில் பங்கும் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகள் இயக்குநரை கோபத்திற்கு உள்ளாக்க, தீபிகாவுக்குப் பதிலாக மற்றொரு நடிகையை தேர்வு செய்ய தயாரிப்பாளர்கள் முடிவெடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து விலகிய செய்தி வெளியான சில நேரத்தில், தீபிகா படுகோன் மற்றொரு பெரிய பட்ஜெட் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படம் அல்லு அர்ஜுனை நாயகனாக கொண்டு, அட்லீ இயக்குகிறார். இந்த வாய்ப்பு தீபிகாவுக்கு மிகுந்த ஈர்ப்பாக இருந்ததாலும், இதுதான் தான் ‘ஸ்பிரிட்’ படத்தை விட்டு விலக காரணமாகும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.