திரை விமர்சனம் : மிஷ்கின் இசையில் டெவில் படம் எப்படி இருக்கிறது?
ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா நடிப்பில் மிஷ்கின் இசையில் திரில்லர் படமாக வெள்ளிக்கிழமை வெளிவந்திருக்கும் டெவில் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம் வாருங்கள்.
ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா நடிப்பில் மிஷ்கின் இசையில் திரில்லர் படமாக வெள்ளிக்கிழமை வெளிவந்திருக்கும் டெவில் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம் வாருங்கள்.
Advertisment
கதைக்களம் :
விதார்த்துக்கும், பூர்ணாவுக்கும் இடையே பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது . ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. விதார்த்துக்கு பூர்ணா மீது கடும் வெறுப்பு ஏற்பட, கணவரின் அன்பு கிடைக்காமல் ஏங்கும் பூர்ணா சாலை விபத்தில் திரிகுனை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த்துக்கு சுபஸ்ரீ மீது காதல் ஏற்படுகிறது. காதலியுடன் விதார்த் இருக்கும்போது மனைவியிடம் சிக்கிவிடுகிறார். அதே போன்று பூர்ணாவும், திரிகுனும் விதார்த்திடம் சிக்கிவிடுகிறார்கள். அதன் பிறகு, அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.
நடிகர்களின் நடிப்பு :
வக்கீல் கதாபாத்திரத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் விதார்த். அதேபோல், பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகளில் தான் ஒரு தேர்ந்த நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நாயகி பூர்ணாவுக்கு சிறப்பாக நடிப்பதற்கான ஸ்கோப் இப்படத்தில் அமைந்திருக்கிறது, அதை கச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார். துணை நடிகர்களான திரிகுன் மற்றும் சுபஸ்ரீ ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக சுபஸ்ரீ கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி இருக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை :
ஒரு எளிமையான காதல் கதையை வைத்துக்கொண்டு அதில் சற்று விறுவிறுப்பையும் சேர்த்து திரைக்கதை எழுதி டெவிலை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. படத்தின் கூடுதல் பலமாக மிஷ்கினின் இசை அமைந்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசை மிரட்டல் ரகம், பாடல்கள் ரசிக்கும் ரகம். இசையமைப்பாளராக அறிமுகமாகும் முதல் படத்துலேயே மிஷ்கினின் இசை பாராட்டுகளை அள்ளுகிறது.
படம் எப்படி ?
முதல் பாதி முழுவதும் விதார்த்துக்கும், பூர்ணாவுக்கும் இடையே காட்சிகள் சற்று சலிப்பு தட்டினாலும், பூர்ணாவுக்கும் திரிகுனுக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் விதார்த்தின் காதல் சம்மந்தப்பட்ட காட்சிகள் சற்று திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது. ஆனால், படத்தில் வரும் சிறு சிறு திருப்பங்களும், த்ரில்லிங் காட்சிகளும் இது ஒரு பேய் படமோ ? என்று நினைக்கும் அளவிற்கு பயங்கரமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் இருந்த சுவாரசியமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் பெருமளவு மிஸ்ஸிங். அதுவே படத்திற்கு சோதனையாகவும் அமைந்துள்ளது.
மொத்தத்தில் உண்மையான டெவில் என்றால் என்ன ? என்பதை சுவாரசியம் குறைந்த கதையில் சொல்லும் படமே டெவில்.
-நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“