scorecardresearch

அசுரன் வரிசையில் கர்ணன்; தனுஷ் சினிமா கெரியரில் மேலும் ஒரு மைல்கல்!

கர்ணன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ள தனுஷுக்கு புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் முக்கியமான படங்களாக அமைந்தது. அந்த வரிசையில், கர்ணன் திரைப்படமும் சேர்ந்துள்ளது.

dhansh acts karnan movie review, karnan review, karnan movie, dhanush, கர்ணன் திரை விமர்சனம், கர்ணன், தனுஷ், சந்தோஷ் நாராயணன், மாரி செல்வராஜ், dhanush acts karnan, mari selvaraj, santhosh narayanan, poo ram, azhagam perumal

Karnan movie review: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இன்று திரையரங்குகளில் வெளியானது. கர்ணன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமால் மேலும் பிரமிக்க வைத்திருக்கிறான்.

தமிழ் சினிமாவில் இயக்குனர் பா.ரஞ்சித் வருகைக்குப் பிறகு, அதன் கதைக் களங்களில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ் சினிமாவில் தலித் அரசியலை வெளிப்படையாக பேசிய பா.ரஞ்சித் தனது அரசியலுக்கு இசைவான படங்களையும் தயாரித்து வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். பரியேறும் பெருமாள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கு அடுத்து, மாரி செல்வராஜுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக நடிகர் தனுஷை வைத்து இயக்கிய கர்ணன் படம் அமைந்தது. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தொஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கர்ணன் திரைப்படத்தின் பாடல்கள் கண்டா வரச்சொல்லுங்க படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், திரையரங்குகளில் கர்ணன் திரைப்படம் வெளியாகி உள்ளது. கர்ணன் திரைப்படம், சாதி பாகுப்பாடுகள், அதனால், ஏற்படும் வன்முறை ஆகியவற்றை பற்றியதுதான். கதையை எளிமையாக சொல்ல வேண்டுமானால், பொடியன்குளம் மக்கள் வசிக்கும் பகுதியில் பேருந்துகள் நிற்பதில்லை. ஆனால், அவர்களுக்கு பக்கத்து ஊரான வேறி சமூகத்தினர் வசிக்கும் மேலூரில் பேருந்து நிற்கிறது. அதனால், மேலூர் சென்று பேருந்து ஏறும் பொடியன்குளம் மக்கள் மேலூர்காரர்களால் சாதி ரீதியாக தாக்கப்படுகிறார்கள். இதனை, எதிர்த்து போராடும் பொடியன் குளம் கர்ணனின் போராட்டம் என்ன ஆகிறது என்று எளிமையாக சொல்லிவிடலாம்.

ஆனால், கர்ணன் கதை குறியீடுகளால், திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் 1990களில் நடந்த சாதி வன்முறைகளை குறிப்பிடுகிறது. பொடியன்குளம் என்ற பெயரே கொடியங்குளம் கலவரத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது. கர்ணனின் (தனுஷ்) ஜோடியாக நடிக்கும் ரெஜிஷா விஜயன் பெயர் திரௌபதி என்று வைக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களின் பெயர்கள் மகாபாரதக் கதைகளின் பெயர்களாக அமைந்துள்ளது.

பொடியன்குளத்தில் பேருந்து நிற்க வேண்டும் என்பதற்காக ஊர் மக்களுடன் சேர்ந்து பேருந்தை அடித்து நொறுக்கிறான் கர்ணன். பின்னர், அப்போது, ஊருக்குள் எஸ்.பி கண்ணபிரான் வருகிறார். அவரை பொடியன்குளம் மக்கள் அவமதித்து அனுப்புகிறார்கள். இதனால், கோமடைந்த எஸ்.பி கண்ணபிரான் பொடியன்குளத்தைச் சேர்ந்த சிலரை வரவழைத்து கடுமையாக தாக்கி சிறை வைக்கிறார். இதனை அறிந்த கர்ணன் (தனுஷ்) மற்றும் சில நண்பர்கள் காவல் நிலையத்தையே சூறையாடி அவர்களை மீட்டு வருகிறார்கள்.

போலீசார் மீது கை வைத்துவிட்டோம், அதனால், போலீஸ் திரும்பவும் ஊருக்குள் வரும் என்று நினைத்து கிராமத்தில் அனைவரும் காவல் இருக்கிறார்கள். அப்போதுதான், கர்ணனுக்கு சிஆர்பிஎஃப் போலீஸ் வேலையில் சேர்வதற்கு உத்தரவு வருகிறது. ஊர் மக்கள் அவரை வேலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த நேரத்தில் ஊருக்குள் நுழையும் போலிசார் ஊருக்கு வந்து வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். திரும்பி வந்த கர்ணன் இதனை எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் கதை.

பரியேறும் பெருமாளில் அமைதியாக உரையாடிய மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் கதாநாயகனை வாளெடுக்க வைத்துள்ளார். தனுஷ் கர்ணனனாக பிரமாதமாக நடித்து நடிப்பு அசுரன் என்று நிரூபித்துள்ளார். ரசிகர்கள் பலரும், கர்ணன் படத்துக்கு தனுஷுக்கு மேலும் ஒரு தேசிய விருது அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் யோகி பாபு, அழகம் பெருமாள், பூ ராம், போலீஸ் எஸ்.பி நட்ராஜ் என பலரும் தங்கள் பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்துக்கு வலு சேர்த்துள்ளார். கண்டா வரச்சொல்லுங்க., என் ஆளு பேரு மஞ்சணத்தி ஆகிய பாடல்களிலு பின்னணி இசையிலும் ரசிகர்களை ஈர்க்கிறார். கலை இயக்குனர் ராமலிங்கம் ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு சிறப்பாக செய்துள்ளார்.

கர்ணன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ள தனுஷுக்கு புதுப்பேட்டை, ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் முக்கியமான படங்களாக அமைந்தது. அந்த வரிசையில், கர்ணன் திரைப்படமும் சேர்ந்துள்ளது. ஆடுகளம், அசுரன் படம் தனுஷுக்கு தேசிய விருது பெற்று தந்தது போல கர்ணனும் பெற்றுத்தருவான் என்று விமர்சகர்களும் ரசிர்களும் இப்போதே தேசிய விருது போட்டியில் கர்ணனை முன்வைத்துள்ளனர். கர்ணன் திரைப்படம் தனுஷின் சினிமா கெரியரில் நிச்சயமாக மேலும் ஒரு மைல் கல்தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Dhansh acts karnan movie review mari selvaraj santhosh narayanan