பாபு:
இது அறிவிப்புகளின் காலம். எது எதற்கு அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற வரைமுறை கடந்து சென்று கொண்டிருக்கிறது திரைத்துறை. இணைய தலைமுறையை மனதில் வைத்து செய்யப்படும் இந்த அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் தீராத போட்டியையும் வன்மத்தையும் சேர்த்தே வளர்க்கின்றன.
முன்பு பாடல்கள் வெளியீடு, பட வெளியீடு என்று ஒரு படத்துக்கு இரு அறிவிப்புகள் வரும். பிறகு ட்ரெய்லர் வெளியீடு ஒட்டிக் கொண்டது. இப்போது பர்ஸ்ட் லுக் அறிவிப்பு, செகண்ட் லுக் அறிவிப்பு, பர்ஸ்ட் டீஸர் அறிவிப்பு, ட்ரெய்லர் அறிவிப்பு, பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு, செகண்ட் சிங்கிள் அறிவிப்பு, பாடல்கள் வெளியீட்டு அறிவிப்பு, பட வெளியீடு என்று அனுமார் வால் போல் அறிவிப்புகள் நீள்கிறது. பர்ஸ்ட் லுக் எப்போது என்பது நாளை நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அறிவிக்கப்படும் என்று, பர்ஸ்ட் லுக்கை எப்போது அறிவிப்போம் என்பதற்கே அறிவிப்பு வெளியிடுகிறார்கள். இந்த அறிவிப்புகள் அனைத்தும் இணையத்தில் புழங்கும் இளைஞர்களை குறிவைத்தே செய்யப்படுகின்றன.
ஒரு படத்தின் டீஸர், டிரெய்லரை யூடியூபில் எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் லைக் செய்தார்கள் என்ற போட்டி இப்போது ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வந்து நிற்கிறது. பர்ஸ்ட் லுக் அறிவிப்பு வெளியிட்டால் அதையே ஒரு ஹேஷ்டேக்காக்கி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் கொண்டுவர ரசிகர்கள் படாதபாடு படுகிறார்கள். இந்த வெட்டி வேலை இரு முக்கிய நடிகர்களின் ரசிகர்கள் மோதும் போது பைத்திய நிலையை எட்டுகிறது. அதுதான் இப்போது தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே நடந்து கொண்டிருக்கிறது.
தம்பி என்று ஒருகாலத்தில் தனுஷ் தட்டிக் கொடுத்த சிவகார்த்திகேயன் இப்போது தனுஷுக்கே போட்டியாக வளர்ந்து நிற்கிறார். சிவகார்த்திகேயன் படங்களைவிட ஒரு ரூபாயாவது அதிகம் தனது படம் வசூலிக்க வேண்டும் தீராத வேட்கை தனுஷிடம் உள்ளதோ இல்லையோ அவர் ரசிகர்களிடம் அமோகமாக உள்ளது. அது இணையத்தில் இப்போது போட்டியாக வெடித்திருக்கிறது.
சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பை கடந்த இருபதாம் தேதி மாலை ஏழு மணிக்கு வெளியிட்டனர். அடுத்த அரை மணிநேரத்தில் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய லோகோ வெளியீடு குறித்த அறிவிப்பு வந்தது. அதனைத் தொடர்ந்து யுத்தம் தொடங்கியது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இரு நடிகர்களின் ரசிகர்களும் பல்வேறு ஹேஷ்டேக்குகளுடன் நீயா நானா போட்டியை ஆரம்பித்தனர். அது இன்னும் முடியவில்லை. கௌதம் அதனை விசிறி விட்டிருக்கிறார்.
சீமராஜா படத்தின் வாரேன் வாரேன் சீமராஜா பாடலை இன்று வெளியிடுகிறார்கள். சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதனை ட்விட்டரில் ட்ரெண்டாக்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஏற்கனவே வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் விசிறி பாடலின் இன்னொரு வடிவத்தை நாளை வெளியிடுவதாக கௌதம் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் சுறுசுறுப்படைந்துள்ளனர்.
முன்பு நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே போஸ்டர் யுத்தம் நடக்கும். படம் வெளியாகும் போது எந்த நடிகரின் கட்அவுட் உயரமானது என்ற போட்டி எழும். இப்போது அது ட்விட்டர் யுத்தமாக மாறியிருக்கிறது.
களம் மாறினாலும் மனநிலை ஒன்றே... தனிநபர் வழிபாடு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.