அருண் மாதேஸ்வரன் - தனுஷ் கூட்டணியில் வெளியாகி உள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கதைக்களம் :
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நடக்கும் கதை. ஆங்கிலேயர்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்க அவர்களின் ராணுவத்தில் சேர வேண்டும் என நாயகன் தனுஷ் ஆசைப்பட்டு அதில் சேர்கிறார். ஆனால், தனுஷின் அண்ணா சிவராஜ் குமாரோ ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார். அதன்பிறகு, துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகளை பெற்று தரமான சிப்பாயாக மாறுகிறார் தனுஷ். எதிர்ப்பாராத விதமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடும் இந்தியர்களை கொல்ல தனுஷிற்கு உத்தரவு வருகிறது. முதலில் அதை ஏற்றுக்கொண்டு தன் சொந்த மக்களையே சுட்டு தள்ளும் தனுஷ் ஒரு கட்டத்தில் தான் செய்வது தவறு என புரிந்து கொண்டு, இந்திய மக்களை சுட சொன்ன ஆங்கிலேய அதிகாரியை சுட்டு வீழ்த்துகிறார். அதன் பிறகு, மில்லராக இருந்த தனுஷ் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் கேப்டன் மில்லராக மாறி எப்படி எதிரிகளை துவம்சம் செய்கிறார் என்பதே மீதி கதை
நடிகர்களின் நடிப்பு
இந்திய அளவில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒருமுறை கேப்டன் மில்லரில் உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். சிப்பாயாக நடை, உடை, கம்பிரம் என பக்காவாக பொருந்தியுள்ளார். அனல் தெறிக்கும் சண்டை காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். ஆக்ரோஷமான தனுஷின் நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஜெயிலரில் மிரட்டிய சிவராஜ் குமாருக்கு மற்றுமொரு மிரட்டலான கதாபாத்திரம். மேலும், பிரியங்கா மோகன், இளங்கோ குமாரவேல், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், நிவேதிதா சதிஷ் ஆகியோரும் படத்திற்கான சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். ஜெயபிரகாஷ், ஜான் கொக்கன், காளி வெங்கட் ஆகியோரின் வில்லத்தனம் மிரட்டல்
இயக்கம் மற்றும் இசை :
தன்னுடைய முந்தைய படங்களை போலவே அழுத்தமான வன்முறை அதிகம் நிறைந்த கதைக்களத்தையே இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோவாக தன் இசையின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ப தீப்பொறி இசையால் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்
படம் எப்படி ?
போர் மற்றும் வன்முறையால் மட்டுமே நீதியை பெற்று தர முடியும் என்ற கருத்தில் கதை நகர்கிறது. படம் முழுவதும் ரத்தம், சண்டை, குண்டுகள் என தெறிக்கிறது. உலகத்தரம் வாய்ந்த சண்டை காட்சிகள் மிரட்டல். இடைவேளை, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் இடம்பெறும் சண்டை காட்சிகள் முரட்டு சம்பவம் தான். அங்கங்கே சற்று தொய்வு ஏற்பட்டாலும் பெரிய அளவில் அவை படத்தை பாதிக்கவில்லை.
ஜாதி மற்றும் தீண்டாமை குறித்து வரும் வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது. மொத்தத்தில் படம் பிரமிக்க வைத்தாலும், அதீத வன்முறை குடும்ப ரசிகர்களை ஈர்க்குமா ? என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“