நடிகர் தனுஷ் தற்போது தான் ஹாலிவுட்டில் நடித்திருக்கும், ‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ படத்தின் வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படம் வரும் ஜூன் 21-ம் தேதி வெலியாகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் தனுஷ்.
அந்தப் படத்தின் கதை பிடித்திருப்பதாகவும், அதன் ரீமேக் உரிமத்தை வாங்க முயற்சி செய்துக் கொண்டிருப்பதாகவும் முன்பே அவர் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருந்த ‘அந்தாதுன்’ படத்தில் ஆயுஷ்மன் குரானா முன்னணி கதாபாத்திரத்திலும், தபு மற்றும் ராதிகா ஆப்தே முக்கியமான ரோல்களிலும் நடித்திருந்தார்கள்.
இது பற்றி தனுஷ், ‘ரீமேக் படங்களில் நடிப்பதை 2009-ம் ஆண்டே விட்டுவிட்டேன். இருப்பினும் இத்தனை அற்புதமான கதையைக் கொண்ட அந்தாதுன் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க விருப்பப்படுகிறேன். அதற்கான உரிமத்தை கைப்பற்றும் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன” எனத் தெரிவித்திருந்தார்.
தவிர, மீண்டும் இயக்குநர் ஆனந்த் எல் ராயுடன் இணைந்து பாலிவுட்டுக்கு ரீ எண்ட்ரி கொடுப்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். இவர்கள் 2013-ம் ஆண்டு ‘ராஞ்சனா’ படத்தில் இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.