ஓ.டி.டியில் வெளியாகவுள்ள தனுஷின் படமான ஜகமே தந்திரம் ட்விட்டரில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெகமே தந்திரம். மேலும், இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் வெளியான இப்படத்தின் டிரைலர் இதுவரை 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. டிரைலரை ரசிகர்களும் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த படம் தயாராகி கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக திரையில் வெளியிடுவதற்காக காத்திருக்கிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திரையில் வெளியிட முடியாததால், ஒடிடி தளங்களில் வெளியிடும் முடிவில் இருப்பதாக தனுஷ் நான்கு மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். தற்போது முன்னனி ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இல் ஜூன் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், டிரைலரை பார்த்த பின் இந்த திரைப்படம் தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என தனுஷ் ரசிகர்கள் வருத்ததில் உள்ளனர்.
கேங்ஸ்டர் கதை அமைப்பைக் கொண்ட இந்த படத்தில் தனுஷ், சுருளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் 17 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் உரையாடல் நிகழ்ச்சியில் இந்த திரைப்படம் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
அந்த சாதனை என்னவென்றால், நேற்றைய தினம் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்கள் வெளியீட்டிற்காக, நேற்று இரவு 8:30 மணியளவில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள். நடிகர் தனுஷும் இந்த கலந்துரையாடலில் பங்குகொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த நிகழ்வை யூடியூப் பிரபலம் அலெக்சாண்டர் பாபு தொகுத்து வழங்கினார்.
இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒரே சமயத்தில் 17 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டு கலந்துரையாடியுள்ளனர். ஒரு உரையாடல் நிகழ்வில் 17 ஆயிரம் பேர் கலந்துக் கொண்டது புதிய சாதனையாக கூறப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன்னதாக ‘ஆர்மி ஆஃப் டெட்’ படக்குழுவினர் நடத்திய கலந்துரையாடலில் அதிகம் பேர் கலந்துகொண்டது சாதனையாக இருந்தது. இப்போது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் அந்த சாதனையை முறியடித்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil