தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் வொண்டர் பார் எனும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் எதிர்நீச்சல், வேலை இல்லா பட்டதாரி, காக்கா முட்டை, மாரி, நானும் ரவுடிதான், விசாரணை, வட சென்னை உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.
இந்நிலையில், முன்னணி நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த 'நானும் ரவுடிதான்' படத்தில் தான் மலர்ந்துள்ளது.
இந்த சூழலில், நடிகை நயன்தாராவின் திருமணம் ஆவணப் படமாக நெட்பிளிக்சில் கடந்த நவம்பரில் வெளியானது. இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறியும், அதை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் தனுஷ் சார்பில் வொண்டர் பார் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.