Alaka Sahani
தான் மிகவும் சாதாரணமாக இருப்பதாகவும், அதையே தனது பலமாக உணர்வதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். பாடலாசிரியர், இயக்குனர் என பல்வேறு பரிமாணங்களை தன்னகத்தே கொண்டுள்ள தனுஷ், பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டில் தனது கால்தடத்தை பதித்திருந்தார். இந்நிலையில், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தடம்பதித்துள்ளார்.
பிரான்சில் கடந்தாண்டு வெளியான இந்த படம் பெரும்வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது, நார்வே சர்வதேச திரைப்பட விருது மற்றும் ரே ஆப் சன்ஷைன் விருது என இரண்டு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.
இந்த படம், வரும் 21ம் தேதி இந்தியா, அமெரிக்கா, கனடா , இங்கிலாந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வெளியாக உள்ளது.
தமிழில், இந்த படம், பக்கிரி என்ற பெயரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
The Extraordinary Journey of the Fakir படம் இந்தியாவில் வெளியாக உள்ள நிலையில், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தனுஷ் அளித்த பேட்டியை இங்கு காணலாம்
The Extraordinary Journey of the Fakir படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளீர்கள். எவ்வாறு உணர்கிறீர்கள்?
சர்வதேச திரை நட்சத்திரங்களுடன் நடிக்கும்போது அவர்களிடமிருந்து புதுவிதமான விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். வளர்ந்து வரும் நடிகனான எனக்கு, இந்த அனுபவம் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த படம் ஸ்பெயின், பிரான்சில் வெளியாகி நல்ல வரேவற்பை பெற்றுள்ளது. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்தது, எனது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு மும்பையில் நல்ல வரவேற்பு இருந்ததே?
அதை எனது பாக்கியமாக கருதுகிறேன். எனது பெற்றோர்களின் பிரார்த்தனை மற்றும் கடந்த காலங்களில் நான் செய்த நற்பலன்களின் விளைவாக தான் இந்த நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன்,
Pan-Indian acceptance தகுதியுள்ளவராக உயர்ந்துள்ளீர்களே.. அதுகுறித்து..
நான் அந்த நிலைக்கு சென்றுவிட்டதாக எல்லாம் உணரவில்லை. நான் எப்போதும் போல சாதாரணமாக இருக்கிறேன். அதைத்தான் எனது பலமாக கருதுகிறேன். நான் செய்துவரும் வேலையில் கண்ணும் கருத்துமாக உள்ளேன். நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். என் திரைவாழ்க்கையில் நிறைய நல்ல திரைக்கதையம்சம் கொண்ட கதைகள் வந்துள்ளன. ஆனால், இதுபோன்றதொரு அருமையான கதைக்காக காத்திருந்தேன். அது இந்தபடத்தின் மூலம் கிடைத்துள்ளது.
மும்பை சேரி பையன் கேரக்டருக்கு மாற எப்படி தயார் ஆனீர்கள்?
இயக்குநர் கென் ஸ்காட் சொல்லிக்குடுத்ததன் பேரில் தயார் ஆனேன். நான் அந்த கேரக்டராக மாற இயக்குனரின் பங்களிப்பு தான் காரணம். அவர் தான் என்னை அந்த கேரக்டருக்கு செதுக்கினார்.
ஆஸ்கர் விருது வென்ற பெரிநைஸ் பேஜாவுடன் டான்ஸ் ஆடியுள்ளீர்கள். அந்த அனுபவம்?
புது அனுபவமாக இருந்தது. எல்லா பெருமையும், நற்பெயரும் பேஜோவிற்கே சேரும். அந்த நடனத்திற்காக இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டோம்.
வளர்ச்சிக்கு மொழி தடையாக இருப்பதாக உணர்கிறீர்களா?
நல்ல கலை, இசை, ஓவியம், கவிதை, இலக்கியம் எந்தமொழியில் இருந்தாலும், அதுமக்களை சென்றடையும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.சில நல்ல புத்தகங்கள், மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்களாலேயே வாசிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி புத்தகங்களை, நான் தமிழ் மொழியிலேயே படித்திருக்கிறேன்.
தயாரிப்பாளராக நிறைய படங்கள் பண்ணியிருக்கிறீர்கள். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எதனால் வந்தது?
நல்ல படங்களினால் மாற்றம் வரும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தயாரிப்பதில் அலாதியான மனதிருப்தி எனக்கு கிடைக்கிறது.
பவர் பாண்டி கதைதான் உங்களை அந்த படத்தை இயக்க தூண்டியதா...
நிச்சயமாக. நான் இந்த கதையை, எனது பெற்றோர்களுக்கு வயதாகும்போது சொல்லலாம் என இருந்தேன். அவர்களும் அதற்காக காத்திருந்தார்கள்.அவர்களுக்கு அன்பின் மூலமே மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். நான் அந்த படத்தை இயக்கினேன் என்பது பெருமையாக உள்ளது. இந்த கதையை, மிக எளிதாக சொல்லவேண்டும் என நினைத்து படத்தை இயக்கினேன்.
தயாரிப்பாளர் , இயக்குனர். இதில் எதை விரும்புகிறீர்கள்?
நான் நடிகர் என்றால், என்னிடத்தில் எதை விரும்புகிறார்களோ அதை செய்கிறேன். அதேநேரத்தில் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் என்றால், எல்லா விசயங்களிலும் தலையிடுவேன்.எனது கருத்துக்களையும் அவ்வப்போது தெரிவிப்பேன். இயக்குனர் பணியையே மிகவும் விரும்புகிறேன்.
நீங்கள் எழுதியதை மட்டுமே இயக்குகிறீர்கள். அப்படித்தானே.
இந்நாள் வரை அப்படித்தான், நான் என்ன எழுதுகிறேனோ, அதையே, இயக்கவும் செய்கிறேன், இந்தநிலை ஒருநாள் மாறலாம். நான் அதிகம் எழுதுவதை விரும்புவேன். நான் எளிதில் சோர்வடைய மாட்டேன். குழந்தைகள் படிப்பு நேரங்களில், விளையாடுவதை விரும்புவதை போல, நான் இதை முழுவிருப்பத்துடன் செய்கிறேன்.
இசைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
இசை மட்டும் இல்லையென்றால், நான் எப்போதோ இறந்திருப்பேன். இசை என் வாழ்வோடு தொடர்பு உடையது. நான் என் தொடர்பான இசை குறித்து மட்டும் பேசவில்லை. பொதுவாகவே இசை ஒரு உன்னதமான கலை. இசையை ரசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
நடிக்க வராவிட்டால்....
சமையல் கலைஞராக ஆகவேண்டும் என்பது என் விருப்பம். எனக்கு சமைக்க தெரியாது. ஆனால், அதை பற்றி தெரிந்துகொள்ள அதிகம் விருப்பப்படுவேன் என்று நடிகர் தனுஷ் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.