’ஆங்கிலத்தில் எதுக்கு பேசணும், பக்கத்து ஸ்டேட் தானே தமிழிலே பேசுறேன்’ என ஹைதராபாத்தில் நடந்த வாத்தி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் தனுஷ் கெத்தாக பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். கல்வி வியாபாரம் பற்றிய கதைக்களத்தில் சமுத்திரகனி, சாய் குமார், இளவரசு, மொட்டை ராஜேந்திரன், காவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையில் ஏற்கனவே பாடல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்: தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும்; தனுஷின் வாத்தி ட்ரைலர் வெளியீடு
இந்தநிலையில், இந்தப் படத்தின் டிரைலர் புதன்கிழமை (பிப்ரவரி 8) வெளியிடப்பட்டது. படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் சார் என்ற பெயரில் வெளியாகிறது. இதற்காக தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் ஹைதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் தனுஷ், ‘‘எனக்கு தெலுங்கு அவ்வளவாக பேச வராது. ஆனால் புரியும். தெலுங்கு தெரியலனா இங்க்லீஷ்ல பேசணும்னு இல்ல. நீங்கள் எங்களின் பக்கத்து மாநிலம்தானே, ஆங்கிலத்தில் எதற்கு பேசவேண்டும். தமிழில் பேசுகிறேன். புரியும்தானே” என்று கேட்டதற்கு ரசிகர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய தனுஷ், ‘முன்பு தமிழ் சினிமா, தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமா என இருந்தது. தற்போது எல்லோரும் எல்லா படங்களையும் பார்க்கின்றோம். தமிழ், தெலுங்கு, கன்னட சினிமா என்ற நிலை இந்திய சினிமாவாக மாறியுள்ளது. நீங்கள் தமிழ்ப் படம் பார்க்கிறீர்கள். நாங்கள் தெலுங்கு படங்களைப் பார்க்கிறோம். இந்த மாற்றம் மிகவும் அழகாக இருக்கிறது. ‘வாத்தி’ படத்தைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு மாநில எல்லையில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதைதான். இதில் இரண்டு கலாசாரமும், மொழியும் கலந்துள்ளது. அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.
உடனே ரசிகர்கள், ‘தமிழ் புரியவில்லை’ என்று சொல்ல ஆங்கிலத்தில் பேசட்டுமா என கேட்டு, ஆங்கிலத்தில் தொடர்ந்தார் தனுஷ். தொடர்ந்து, “இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படியொரு படம் கொடுத்ததற்கு நன்றி” என்று கூறினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வரும் அமுல் பேபி வசனத்தை சொல்லுமாறு கேட்க, ‘தமிழில்தான் சொல்ல வரும்’ என கூறி அந்த டயலாக்கை தனுஷ் சொல்ல, ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகமடைந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil