நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘வட சென்னை’. ’பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இவர்களின் வெற்றிக் கூட்டணியில் 3-வது படமாக அந்தப் படம் உருவாகியிருந்தது.
மூன்று பாகங்கள் கொண்ட படத்தின் முதல் பாகமாக ‘வட சென்னை’ வெளியாகியிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷுடன் இணைந்து அதில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரகனி, பவன், டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். முதல் பாகம் படமாக்கப்படும் போதே, இரண்டாம் பாகத்திற்காக சில காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய காட்சிகளை படமாக்கிய பின் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என முன்னர் கூறப்பட்டது.
வட சென்னை படம் வெற்றியடைந்தாலும், தங்களை தவறாக சித்தரித்திருப்பதாக, வட சென்னை மக்கள் போராட்டம் நடத்தியதோடு தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். இதனால் இரண்டாம் பாகத்திற்கு தேவையான காட்சிகளை அந்தப் பகுதியில் படமாக்குவது தடை பட்டிருப்பதாகவும், இந்தக் காரணத்தினால் வட சென்னை 2 படத்தை கை விட்டுவிடலாம் என ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது அந்த செய்தியினை மறுத்திருக்கும் தனுஷ், “என் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. வட சென்னை 2 தயாரிப்பில் இருக்கிறது. எனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் வரை, எதையும் நம்பாதீர்கள்” என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
தவிர வட சென்னை படத்தில் அமீரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் உருவாகும் வெப் சிரீஸ் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.