அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் கேப்டன் மில்லர். இந்தப் படம் ஜன.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து மாறுபட்ட கருத்துகளும் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன. படம் பழைய மாவை மீண்டும் அரைகின்றது என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்கள் படத்தின் வசூலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. படம் 4 நாள்களில் ரூ.50 கோடி கிளப்பை தாண்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (ஜன.16,2024) நிலவரப்படி ரூ.59.63 கோடி வசூலித்துள்ளது. படம் முதல் நாளில் ரூ.16.29 கோடியும், 2ம் நாளில் ரூ.14.18 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.15.65 கோடியும், 4ம் நாளில் ரூ.13.51 கோடியும் வசூலித்துள்ளது. இநதத் தகவலை ட்விடடர் எக்ஸ் தளத்தில் மனோபாலா விஜயபாலன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் படம் ஒடுக்கப்பட்டோரின் வலியை பேசும் என படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “ஒடுக்கப்பட்டோர் சுதந்திரத்திற்காக போராடும் கதை இது. என் மாமா இராணுவத்தில் இருந்தார், நான் குழந்தையாக இருந்தபோது அவர் என்னிடம் சொன்ன எல்லாவற்றிலிருந்தும் இந்த யோசனை தோன்றியது.
1980 களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த நிகழ்வுகளிலிருந்தும் நான் சில உத்வேகங்களைப் பெற்றுள்ளேன். அதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கதையை உருவாக்கினேன்.
ஆனால் அந்த ஸ்கிரிப்டை அந்த அசல் வடிவத்தில் உருவாக்குவது சாத்தியமில்லை; இது இலங்கைப் போரை அடிப்படையாகக் கொண்டதால் பல தயாரிப்பாளர்கள் அச்சமடைந்தனர்.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக அந்தக் கதையுடம் நான் காத்திருக்க வேண்டியது இருந்தது, பின்னர் அதை பிரிட்டிஷ் இராணுவத்தின் அடிப்படையில் இன்னும் ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நினைத்தேன்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“