யாமிருக்க பயமே’வில் ‘பன்னிமூஞ்சி வாயன்’, ‘மான் கராத்தே’வில் வௌவால், ‘இந்தியா பாகிஸ்தான்’ல ஆமக்குஞ்சு, ‘கலகலப்பு’ல பிம்ப் கேரக்டர் என காமெடி காட்சிகளில் வெளுத்துகட்டிக்கொண்டிருந்த யோகி பாபு, ஹீரோவாக நடித்துள்ள படம் தர்மபிரபு...
அறிமுக இயக்குனர் முத்துக்குமரன் எழுதி இயக்கியிருக்கும் படத்தின் வசனங்களை, யோகி பாபுவும் இணைந்து எழுதியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசையமைத்து உள்ளார். எடிட்டிங் பணிகளை கே,எல். பிரவீன் செய்துள்ளார்.
எமலோகத்தின் அரசனாக இருக்கும் ராதாரவி, தனக்கு வயதாகிவிட்டதால், தன் பதவிக்கு மற்றொரு நபரை போட தீர்மானிக்கிறார். சித்திரகுப்தராக வரும் ரமேஷ் திலக், எமதர்மராஜா பதவிக்கு ஆசைப்படுகிறார். ஆனால், ராதாரவி, தனது மகனான யோகி பாபுவுக்கே எமதர்மராஜா பதவி வழங்குகிறார். இது, சித்திரகுப்தரான ரமேஷ் திலக்கிற்கு பிடிக்கவில்லை. ஏதாவது சூழ்ச்சி செய்து எமதர்மராஜா பதவியை பிடிக்க ரமேஷ் திலக் திட்டமிடுகிறார்.
சூழ்ச்சியின் ஒருபகுதியாக, எமதர்மராஜாவான யோகி பாபுவை பூலோகத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். அங்கு விபத்தில் சிக்கி இறக்கும் தருவாயில் உள்ள ஒரு குழந்தையை, யோகி பாபு காப்பாற்றி விடுகிறார். இதன்காரணமாக சிவபெருமானின் ( நான் கடவுள் ராஜேந்திரன்) ஆளாகிறார். அந்த குழந்தையின் இறப்பின் மூலமே, அரக்கனை ( அழகம்பெருமாள்) அழிக்க சிவபெருமான் திட்டமிட்டிருப்பார். சிவபெருமான், எமதர்மராஜாவிடம், 7 நாட்களுக்குள் அந்த அரக்கன் இறந்த செய்தி தனக்கு கிடைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த எமலோகத்தையே கலைத்துவிடுவதாக எச்சரிக்கை செய்கிறார்.
எமதர்மராஜன், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்தாரா, விதிமுறை மீறாமல் நடந்து கொண்டாரா, ஆட்சியை மீண்டும் தக்கவைத்தாரா, தற்போது நடக்கும் சமூக பிரச்சனைகளுக்கு அவர் சொல்லும் தீர்வு என்ன என்பதே தர்மபிரபு படம்....
சமூகத்தில் தற்போது நடக்கும் ஆணவக்கொலைகள், காதலுக்கு எதிரான மனப்போக்கு, ஜாதி அரசியல், ஆணுக்கும் பெண்ணும் சம உரிமை என சில பெண்கள் செய்யும் கேவலமான செயல்கள் என பல விசயங்கள், படத்தில் ஆங்காங்கே பிரதிபலிக்கிறது.
மொத்தத்தில் தர்மபிரபு சமகால சமூக பிரச்சனைக்கு நல்ல தீர்வு சொல்கிறார். ஆனாலும் படம் பார்ப்பவர்களின் பொறுமை சோதிக்கிறதோ என்ற ஃபீல் தான் நமக்கு!!!