துருவ் விக்ரமின் 'வர்மா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

வர்மா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி வைரலாகி  வருகிறது.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து, மெகா ஹிட்டான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

துருவ் விக்ரமுக்கு நாளை (செப்.23) பிறந்த நாள் என்பதால், இதன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான விழா சென்னையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்காக படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இப்போஸ்டர்கள் இணையத்தில் வைரலாக அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

இப்படத்தில் மேகா என்ற மாடல், துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close