மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் இசையை எந்த நாளும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களால் பிரதிபலிக்க இயலாது என இசையமைப்பாளர் இமான் கோவையில் தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷாலின் வளர்ச்சியும், சூரியின் உயரமும் ஒரு தகப்பனை போல கண்டு ரசிப்பதாக இயக்குனர் சுசீந்திரன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெகவீர நாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. இதில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி என பலர் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையமைத்துள்ள திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் புரோசோன் மால் வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது,
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினரின் செயல்களை விமர்சனமாக 2கே கிட்ஸ் தான் மோசமானவர்கள் என்ற நெகட்டிவ் பிம்பத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பல நல்ல விஷயங்களை இந்த சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த 2"கே லவ் ஸ்டோரி படத்தை இயக்கி இருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் என்னுடைய அறிமுகத்தில் வளர்ச்சியும்,உயரமும் பெற்றுள்ள நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் சூரியின் வளர்ச்சியை ஒரு பள்ளி குழந்தையின் வளர்ச்சியாக தகப்பனை போல கண்டு ரசிப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய படத்தின் இசையைமைப்பாளர் டி.இமான் கூறியதாவது,
காதல் கதைகளுக்கு ஏற்றவாறு மெலோடி பாடல்கள் இந்த படத்திலும் இருப்பதாக கூறிய அவர் சமீப காலங்களில் வெளி வந்த சில முன்னனி படங்களின் இசை இரைச்சல் குறித்த கேள்விக்கு இசை கோர்வையின் போது ஒலி தொடர்பான தொழில் நுட்பத்தில் போதிய கால அவகாசத்தை தயாரிப்பாளர்கள் அவசரப்படுவதால் இது போன்ற தவறுகள் நடப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இசை துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் ஒரு போதும் மனித உணர்வுகளுக்கு ஈடாகாது என விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்