பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எஸ் அதிகாரி கார் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் சென்ற நடிகை டிம்பிள் ஹயாத்தி மீது கிரமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக நடிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தேவி 2 படம் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயாத்தி. இவர் பின்னர் விஷால் ஜோடியாக வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்தார். மேலும், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடித்த ராமபாணம் படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள்: உண்மையான நேஷனல் க்ரஷ்? இவரை யார்னு தெரியுதா?
இந்தநிலையில், ஐ.பி.எஸ் அதிகாரியின் கார் மீதான மோதல் விவகாரத்தில் நடிகை டிம்பிள் ஹயாத்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தனது அப்பார்மெண்டில் ஐ.பி.எஸ் அதிகாரியான டிராபிக் இணை கமிஷனர் ராகுல் ஹெக்டே காரை நிறுத்தி வைத்திருந்தார். அதே அப்பார்மெண்டை சேர்ந்த நபரின் கார் ஒன்று, கமிஷனரின் காரை இடித்து தள்ளிவிட்டு சென்றுள்ளது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த நிலையில், அந்த கார் தெலுங்கு சினிமா நடிகை டிம்பிள் ஹயாத்திக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும், அதில் அவர் பாய்பிரண்டுடன் பயணித்திருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கமிஷனரின் கார் டிரைவர் ஜூப்ளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது பணியை செய்ய விடாமல் தனது காரின் முன்பு அவரது காரை நிறுத்தி இதே போல் பல முறை தொல்லை தந்துள்ளதாக டிம்பிள் ஹயாத்தி மீது அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும் தனது காரில் மோதிவிட்டு அவர் சென்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பேரில் நடிகை டிம்பிள் ஹயாத்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ள நிலையில், "அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால் தவறுகள் மறைக்கப்படாது" என டிம்பிள் ஹயாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil