இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், படத்தின் நாயகியையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர். காரணம் என்ன?
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970 களின் மத்தியில் வடசென்னையில் இருந்த பாக்ஸிங் பரம்பரைகள் மற்றும் எமர்ஜென்ஸியால் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் விவரிக்கும் திரைப்படம் தான் இது. படத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பாக்ஸிங் தான் படத்தின் முக்கிய கரு என்றாலும், அப்போதைய அரசியல் நிகழ்வுகளையும் படத்தில் காட்டியுள்ளார் ரஞ்சித். திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி போன்ற கட்சிகளின் 1975 கால அரசியலை வெளிப்படையாக பேசுகிற இந்த திரைப்படத்தில், எமர்ஜென்ஸி காலகட்டத்தில், திமுகவினர் கைது செய்யப்பட்டதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இதனால் திமுகவினர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் கள்ள கடத்தல், சாராயம் ஆகியவற்றுக்கு காரணம் அதிமுக, எம்ஜிஆர் என்கிற மறைமுக அரசியலும் குறீயிடுகளாக காட்டப்பட்டுள்ளது. இதனுடன் எம்ஜிஆர் எமர்ஜென்சியை ஆதரித்தார் என்பதை சுவரொட்டிகள் மூலம் காட்டப்பட்டுள்ளது. இதுவும் திமுகவினர் கொண்டாட்டத்திற்கு கூடுதல் காரணமாகியுள்ளது.
இதையெல்லாம் தாண்டி, திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் படத்தைக் கூடுதலாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம் படத்தின் நாயகி துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள துஷாரா திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டி அருகே கன்னியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துஷாரா விஜயன். இவர் கோவையில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஃபேசன் டிசைனிங் படித்துள்ளார். பின்னர் மாடலிங், குறும்படங்கள் செய்துள்ளார். பின்னர் போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டும், அந்த மாவட்ட திமுகவினர் கொண்டாடவில்லை. துஷாராவின் தந்தையான விஜயன் திமுகவைச் சேர்ந்தவர் என்பது தான் கூடுதல் கொண்டாட்டத்திற்கு காரணம். விஜயன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் சாணர்ப்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் உள்ளார்.
திமுக பிரமுகரின் மகள், திமுகவை பற்றி பேசும் படத்தில் நடித்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் கூடுதல் சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் பலர் சமூக வலைதளங்கள் மூலம், தந்தைக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.