AL Vijay Second Marriage: தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.விஜய் 2007-ம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அஜித் குமாரை இயக்கி, முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர், அடுத்ததாக ’பொய் சொல்ல போறோம்’ படத்தை இயக்கினார். அதன் பிறகு அவர் இயக்கிய ’மதராசப்பட்டினம்’ திரைப்படம் பெரும் வெற்றியைத் தந்தது.
இவரது ’தெய்வ திருமகள்’, ‘தலைவா’ ஆகியப் படங்களில் நடித்த அமலா பாலை காதலித்து 2014-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார். பின்னர் 2016-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு சட்டப்பூர்வமாக 2017 பிப்ரவரியில் விவாகரத்தும் கிடைத்தது.
‘சில விஷயங்களை வெளிப்படையாகக் கூறாமல் இருப்பது தான், இதுவரை இருந்த அந்த உறவுக்கு தரும் மரியாதை’ என்பதோடு விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் விஜய். இருப்பினும் இதுதான் காரணம் என்று இருவரின் தரப்பிலும் எந்த விளக்கமும் தரப்படவில்லை.
A.L.Vijay - Amala Paul
அதன்பிறகு அமலா பால் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஏ.எல்.விஜய்யும் சில மாதம் முடங்கிவிட்டு, ‘தேவி’, ’வனமகன்’, ‘தியா’ என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். குறிப்பாக விவாகரத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தேவி’ பெரும் வெற்றியைத் தந்து, பெர்சனல் பிரச்னைகளால் துவண்டு போயிருந்த அவரை, துளிர்க்கச் செய்தது.
இந்நிலையில் தற்போது அவர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தலைவி’ எனும் படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
இதற்கிடையே விஜய் 2-வது திருமணம் செய்துக் கொள்வாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. இந்நிலையில் தற்போது அதற்கான நேரம் வந்துள்ளது.
பெற்றோர்களின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டு 2-வது திருமணத்திற்கு சம்மதித்து ஐஸ்வர்யா என்ற பெண்ணை மணக்கிறார் விஜய். சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகளான ஐஸ்வர்யா, எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று பொதுநல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இயக்குநர் ஏ.எல். விஜய், மருத்துவர். ஐஸ்வர்யா திருமணம் வரும் ஜூலை 11-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.