சர்வதேச விருது பெற்ற கொட்டுக்காளி திரைப்படத்தை வணிக நோக்கத்தில் தியேட்டருக்கு கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குனர் அமீர், சிவகார்த்திகேயன் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக முத்திரை பதித்தவர் தான் சூரி. இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பையும், அவரது மார்க்கெட்டையும் உயர்த்திய நிலையில், அடுத்து கருடன் என்ற படத்தில் நடித்திருந்தார். சசிகுமார், மலையாள நடிகர் உண்ணி முகுந்தன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சூரியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. இந்த படம் ரூ100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றது.
விடுதலை, கருடன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சூரி, அடுத்ததாக சினிமாவில் தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்திருந்தார். கூழாங்கல் என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரியுடன் மலையாள நடிகை ஆனா பென் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் ரிலீஸ்க்கு முன்பே, சர்வதேச விருதை வென்றிருந்தது.
இதனிடையே கடந்த வாரம், சூரியின் கொட்டுக்காளி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை ஆகிய இரு படங்களும் வெளியானது. இதில் வாழை படம் எமோஷ்னல் டச்சுடன் இருப்பதாக பலர் விமர்சனங்களை எழுதியிருந்த நிலையில், கொட்டுக்காளி படம் குறித்து கடுமையாக விமர்சனங்கள் வர தொடங்கியது. குறிப்பாக, இந்த படம் பற்றிய ப்ரமோஷனில், சூரி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பேசியது குறித்தும், தற்போதைய படத்தின் நிலை குறித்து ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2 தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த சூரி, ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து நடித்த கொட்டுக்காளி திரைப்படம் தற்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட அமீர், கொட்டுக்காளி படத்தை வணிக நோக்கத்திற்காக, திரையில் வெளியிட்டது தவறு என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நான் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளர் அல்லது இயக்குனராக இருந்திருந்தால் படத்தை திரையரங்கில் வெளியிட்டிருக்க மாட்டேன். இந்த படம் சர்வதேச அளவில் விருது வென்றுள்ளது. அத்துடன் இதை முடித்திருக்க வேண்டும். இந்த படத்தை தயாரித்தவர் பிரபல நடிகர். அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிரபல ஒடிடி தளத்திற்கு படத்தை விற்றுவிட்டு, போட்ட முதலீட்டை எடுத்துவிட்டு பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்.
படம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த கன்னியத்தை அந்த படத்திற்கு அப்படியே விட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு வணிக நோக்கத்திற்காக தியேட்டரில் படத்தை வெளியிட்டு திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒடிடி தளத்தில் விற்றிருந்தால், அந்த படத்தை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்திருப்பார்கள் என்று அமீர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“