ஆண்டாள் கோயில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல இளையராஜாவிற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து இயக்குநர் அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இளையராஜாவின் இசையில் வெளியான “திவ்ய பாசுரம்” நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று இரவு (டிச 15) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினரும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆண்டாள் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது, இளையராஜா மற்றும் ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் ஆகியோருக்கு மேள தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆண்டாள் ரெங்கமன்னாரை தரிசனம் செய்ய அர்த்த மண்டபத்திற்குள் ஜீயருடன் செல்ல இளையராஜா முற்பட்டார். அப்போது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை அர்த்த மண்டபத்திற்கு வெளியே நிற்குமாறு கூறினர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இயக்குநர் அமீரும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். குறிப்பாக, "இந்தியத் திருநாட்டின் பிரதமராக இருந்தாலும், தேசத்தின் முதல் குடிமகனாக இருந்தாலும், உலக அரங்கில் இசை ஞானியாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதி இல்லை. சனாதனம் தலை விரித்தாடும் நாட்டில் சமத்துவம் எப்போது மலரும்?" என தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் அமீர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“