இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த 25வது படமான ஜப்பான் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இயக்குனர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா - நடிகர்கள் கார்த்தி - சூர்யா ஆகியோர் இடையேயான 15 ஆண்டுகளுக்கு மேலாக புகைந்து கொண்டிருந்த பிரச்னை சமூக ஊடகங்களில் விவாதமாகி பற்றி எரியத் தொடங்கியது.
நடிகர் சிவக்குமாரின் மகன் நடிகர் சூர்யா சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டாலும் அழுத்தமான ஒரு பார்வையைக் கொடுத்தது என்றால் அது இயக்குனர் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படம்தான். அதே போல, சூர்யாவின் சகோதரர் கார்த்தியை இயக்குனர் அமீர்தான் பருத்திவீரன் படத்தில் அறிமுகம் செய்தார். கார்த்தியின் முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. பல விருதுகளை வென்றது. கார்த்தி முதல் படத்திலேயே வெற்றியின் உச்சத்தை அடைந்தார்.
இந்நிலையில்தான், கார்த்தி 25 நிகழ்ச்சியில் கார்த்தியை அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் கலந்துகொள்ளாதது விவாதமானது. இதற்கு முறையான அழைப்பு இல்லை என்று அமீர் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தயாரிப்பாளர் ஞான்வேல் ராஜா, இயக்குனர் அமீர் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது.
இந்த விவகாரத்தில் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக, மௌனம் பேசியதே படத் தயாரிப்பாளர் கணேஷ் ரகு, சசிகுமார், சமுத்திரகனி, கரு. பழனியப்பன், சேரன், நந்தா, பெரியசாமி உள்ளிட்ட பலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். ஆனால், ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரையுலகில் பெரிய அளவில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், பருத்திவீரன் படம் தொடர்பாக நடிகர் சூர்யா, கார்த்தி இருவரும் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஒரு இயக்குனராக தனக்கு அடையாளம் பெற்றுத் தந்த ‘மௌனம் பேசியதே’ படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தனது முதல் படத்தின் இயக்குனர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துகும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக்கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும் அன்பையும் ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்கு அளித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் ‘மௌனம் பேசியதே’ வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சென்னையை நோக்கி சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும்,
என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் - நடிகைகளுக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்!
என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கு ஊடக - பத்திரிகை நண்பர்களுக்கும் தமிழக மக்களுக்கும் குறிப்பாக ‘மௌனம் பேசியதே’ ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
என்னாளும் அன்போடும் மாறாத நன்றியோடும், மு. அமீர்” என்று தெரிவித்துள்ளார்.
‘மௌனம் பேசியதே’ படத்திற்காக இயக்குனர் அமீர் மறக்காமல் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் சூர்யா இன்னும் மௌனம் காப்பது எதனால் என்ற கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.