ரஜினியின் அருணாச்சலம், கமலின் அன்பே சிவம் என இரு முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள சுந்தர்.சி அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவலாக உள்ளது.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுந்தர்.சி. இயக்குனர் மணிவன்னனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், 1995-ம் ஆண்டு வெளியான முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஜெயராம் குஷ்பு, மனேரமா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து, முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா மேட்டுக்குடி அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு, அரண்மனை சீரியஸ் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதிலும் இவரின் இயக்கத்தில் வெளியான 25-வது படமான கலகலப்பு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படத்தை தவிர இவர் இயக்கிய அனைத்து படங்களிலுமே காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும்.
தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்ட சுந்தர்.சி. ஜீவா ஜெய் நடிப்பில் காபி வித் காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. தொடர்ந்து வில்லாளன். தலைநகரம் 2, ஒன் 2 ஒன் உள்ளிட்ட படங்கங்களில் நாயகனான நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி. தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாவதற்கு முன்பு நடிகராக அறிமுகமாகிவிட்டார்.
கடந்த 1990-ம் ஆண்டு மணிவன்னன் இயக்கத்தில் வெளியான வாழ்க்கை சக்கரம் என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான சுந்தர்.சி, தொடர்ந்து மணிவன்னன் இயக்கத்தில் மூன்றாவது கண் என்ற படத்தில் சிறிய வேடத்திலும், தான் இயக்கிய முறை மாமன் படத்தில் கிராமத்தின் ஒரு ஆளாக சிறிய வேடத்திலும் நடித்திருப்பார்.
அந்த வகையில் சுந்தர்.சி இயக்கிய 5-வது படம் அருணாச்சலம். ரஜினிகாந்த் சௌந்தர்யா வடிவுக்கரசி, செந்தில் ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை பெற்றது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும்போது அதில் ஒரு பத்திரிக்கையாளராக சுந்தர்சி நடித்திருப்பார்.
தற்போது இந்த காட்சியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரஜினி ரசிகர்கள் எத்தனைபேர் கவனித்தீர்கள் அருணாச்சலம் படத்தில் சுந்தர்.சி. ரிப்போர்ட்டர் வேடத்தில் நடித்திருக்கார் என்று ஷேர் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil