/indian-express-tamil/media/media_files/2025/09/06/screenshot-2025-09-06-125022-2025-09-06-12-51-11.jpg)
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த துணிவு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். ஹீரோயின் யார் என்பதை இன்னும் படக்குழு முடிவு செய்யவில்லை.
அஜித் இப்போது கமர்ஷியல் ஹீரோவாக இருக்கிறார். ஆனால் தனது கரியரின் ஆரம்பத்தில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து கெட்டப்புகளை மாற்றி நடித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த வாலி,வில்லன், வரலாறு,சிட்டிசன் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகவும் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரலாறு படத்தில் பெண் குணாதிசியங்களோடு ஏற்றிருந்த கதாபாத்திரம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
சேது படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பாலா. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அவருடன் படம் பண்ண ஆர்வம் காட்டிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அந்த வகையில் நந்தா படத்தை முதலில் அஜித்தை வைத்து தான் உருவாக்க இருந்தாராம் பாலா. ஆனால் சில காரணங்களால் அஜித் அப்படத்தில் இருந்து விலகிவிட, பின்னர் தான் அதில் சூர்யா நடித்திருக்கிறார். நந்தா படமும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகிவிட, மீண்டும் பாலாவை நாடிய அஜித், அவரிடம் தனக்காக கதை ஒன்று தயார் செய்யுமாறு கூறி இருக்கிறார். அவர் அஜித் மீது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ஒரு அகோரி கதையை தயாரி செய்திருக்கிறார். அது தான் நான் கடவுள்.
இயக்குனர் பாலாவிடம் ஒரு பழக்கம் இருக்கிறதாம். அவர் யாருடன் படம் பண்ணினாலும் முழு கதையை சொல்ல மாட்டாராம். தன்னை நம்பினால் படத்தில் நடியுங்கள், இல்லையென்றால் வேண்டாம் என மூஞ்சில் அடித்தபடி சொல்லிவிடுவாராம். இந்த அகோரி கதையில் நடிக்க அஜித் ஓகே சொன்னதும் அவரை நீளமாக முடி மற்றும் தாடி வளர்க்க சொல்லி இருக்கிறார் அஜித்.
நீண்ட நாட்கள் அதே முடி மற்றும் தாடியோடு இருப்பதால் வேறு படங்களில் நடிக்க முடியாமல் போய் இருக்கிறது. அதேபோல் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் பாலா என்ன தான் செய்கிறார் என்பதை தெரிந்துகொள்ள பாம் குரோ ஹோட்டலுக்கு சென்றிருக்கிறார் அஜித். அங்கு பாலா தன்னுடைய திரையுலக நண்பர்களுடன் இருந்தாராம்.
அஜித் மற்றும் பாலா இடையே வாக்குவாதம் நடந்ததாக கூறப்படும் ஓட்டல் சம்பவம் இன்னும் மர்மமாகவே உள்ளது. சிலர் அஜித்தை பாலாவின் நண்பர் அடித்ததாகவும், சிலர் அஜித் சேரை உதைத்து சென்றதாகவும், கூடவே துப்பாக்கி மிரட்டலும் நடந்ததாகவும் கூறுகிறார்கள். இந்த விவகாரம் குறித்து, நடிகை சங்கீதா பாலாவிடம் நேர்காணலில் கேள்வி எழுப்பினார்.
நான் கடவுள் படத்தில் அஜித் நடிக்க இருந்தபோது அவரை நீங்கள் ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று அடித்தீர்களா என்று சங்கீதா கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த பாலா, நான் அஜித்தை அடித்தேன் என்று சொல்வதெல்லாம் பத்திரிகையாளர்களின் கற்பனை. ஆனால் அதே சமயம் எனக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் வந்தது உண்மை தான் என்று பாலா சொன்னதும், அந்த அறையில் என்ன நடந்தது என சங்கீதா கேட்க, அது அல்டிமேட்டிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் ஏன் கேட்குறீங்க என சொல்லிவிட்டார் பாலா. இருந்தாலும் அந்த அறையில் நடந்த பிரச்சனை என்பது இன்றளவும் புரியாத புதிராகவே உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.