Varma Issues, Bala Clarifies : தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘அர்ஜூன் ரெட்டி’. விஜய் தேவரகொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்த இந்தப்படம் தெலுங்கு மட்டுமல்லாது, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது.
குறிப்பாக தமிழ் ரசிகர்கல் மத்தியில் இப்படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பெண்கள் மத்தியில் விஜய் தேவரகொண்டாவுக்கும், ஆண்கள் மத்தியில் ஷாலினி பாண்டேவுக்கும் ‘ஃபேன்ஸ் கிளப்புகள்’ உருவாகின.
இந்நிலையில் இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்காக இ4 எண்டெர்டெயின்மெண்ட் சார்பில், இயக்குநர் பாலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ‘வர்மா’ எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக கமிட் ஆனார். ’ரீமேக் படங்களை இயக்க விரும்பாத பாலா, துருவ்வுக்காக அர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய ஒத்துக் கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது’ என வர்மா படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரம் பகிர்ந்துக் கொண்டார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து, காதலர் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், படத்தின் ஃபைனல் காப்பி தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்பதால், இதனை கைவிடுகிறோம் என வர்மாவின் தயாரிப்பு நிறுவனமான இ4 எண்டெர்டெயின்மெண்ட் அறிவித்தது. ஒரு தயாரிப்பு நிறுவனமே தங்களது படம், விருப்பமானதாக இல்லை எனக்கூறி கைவிடுவது, இதுவே முதன்முறை.
அதோடு, துருவ் மட்டும் ஹீரோவாக நடிக்க, வேறொரு இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து மீண்டும் இப்படத்தை இயக்குவோம் எனவும் தெரிவித்தது இ4 தயாரிப்பு நிறுவனம்.
வித்தியாச படைப்புகளால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் பாலாவுக்கு இந்த நிலைமையா? என அவரது ரசிகர்கள் கொதித்தெழத் தொடங்கினர். இந்நிலையில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் பாலா.
அதில், ‘படைப்பு சுதந்திரத்தை கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்தே முடிவு. கடந்த ஜனவரி 22-ம் தேதியே இதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் எதுவும் பேச விரும்பவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில், பாலா விலகிக் கொள்வதாக போடப்பட்ட ஒப்பந்தமும் இணைக்கப்பட்டுள்ளது.
வர்மா படம் கைவிடப்பட்டதுக்கு, துருவ்வின் தந்தையும், பாலாவின் நண்பருமான விக்ரம் தான் முக்கியக் காரணம் என ஒருசாரார் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், பாலாவின் அறிக்கையில் ’துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி’ என்ற வார்த்தை இன்னும் நெருடலை ஏற்படுத்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.