/indian-express-tamil/media/media_files/2025/06/02/NsMe6Exp3vYjIKpOJZLB.jpg)
இயக்குநர் பாலா, தமிழ்த் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர். இவர் இயக்குநர் பாலு மகேந்திராவின் உதவியாளராகப் பணியாற்றினார். இது அவரது திரையுலகப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இயக்குநர் பாலா, பிரபல இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவின் மிகவும் முக்கியமான மாணவர்களில் ஒருவரும் ஆவார். இவர்களுக்கு இடையேயான உறவு ஒரு குரு-சிஷ்ய உறவாகவே திரையுலகில் பார்க்கப்படுகிறது.
சேது படத்திற்காக இயக்குநர் பாலாவுக்கு கிடைத்த தனது தேசிய விருதை பாலு மகேந்திராவுக்கு அர்ப்பணித்ததில் இருந்து, அவர் தன் குரு மீது வைத்திருந்த மரியாதை தெரிகிறது. பாலு மகேந்திராவுக்கு பாலாவின் சில படங்கள் பிடிக்கவில்லை என்றும், அதேபோல பாலாவுக்கு பாலு மகேந்திராவின் சில படங்கள் பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
அப்படியான ஒரு படத்திற்கு பாலு மகேந்திராவிடம் இருந்து பாலாவுக்கு கிடைத்த சில விமர்சனங்களை பற்றி அவர் பகிர்ந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இத்திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நடிகர் விக்ரமின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சேது படத்திற்காக சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பாலா பெற்றார்.
இத்திரைப்படம் வெளியான பிறகு, இயக்குனர் பாலா, இயக்குனர் பாலு மகேந்திராவிடம் இருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றதாக கலாட்டா தமிழ் யூடியூப் பக்கத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். பாலு மகேந்திரா பாலாவை அழைத்துப் பேசியபோது, சேது திரைப்படத்தின் கதைக்களத்தை கடுமையாகச் சாடியதாக தெரிவித்தார்.
ஒரு அப்பாவி பிராமணப் பெண்ணை, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு ரவுடி பையனை வைத்து மிரட்டி காதலிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் வாழ்க்கையை அழித்து, அவளுக்கு ஏற்கனவே ஒரு முறை நிச்சயிக்கப்பட்டிருந்த பையனின் வாழ்க்கையையும் கெடுத்தது. கடைசியில் கதாநாயகனை மீண்டும் பைத்தியக்காரனாகவே சித்தரித்தது என்ற கதையை பாலு மகேந்திரா விமர்சித்ததாக கூறினார்.
பாலு மகேந்திரா, பாலாவின் சிந்தனையை குரூர புத்தி என்று விமர்சித்ததாகவும் ஒரு பெண் கதாபாத்திரத்தை, "நீ பெற்ற பிள்ளையை நீயே கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவாயா?" என்று கேட்டு, பாலாவின் கதை சொல்லும் முறையை கடுமையாகச் சாடியதகவும் பாலா கூறினார்.
இயக்குநர் பாலா, தனது 25 ஆண்டுகளுக்கும் மேலான திரைப்பயணத்தில் தமிழ் சினிமாவுக்கு ஒரு தனித்துவமான பங்களிப்பைச் செய்துள்ளார். சேது படத்தில் தொடங்கி நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி இறுதியாக வணங்கான் படத்தை இயக்கியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.