கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய இன்று (ஆகஸ்ட்20) மாலை 6 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடத்த இயக்குனர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டு பிரார்த்தனையில், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இவர்களுடன் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் எஸ்.பி.பி மீண்டு வர இந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
இசை ரசிகர்களால் அன்புடன் எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று தான் குணமடைந்து வருவேன் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதன் பிறகு, எஸ்.பி.பி கொரோனா தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், எஸ்.பி.பி-யின் ரசிகர்கள், அவருடைய சினிமா உலக நண்பர்கள், சினிமா துறையினர் என பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அனைவரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் விருப்பங்களைத் தெரிவித்தனர்.
பின்னர், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்றட்டுள்ளதாக எஸ்.பி.பி-யின் மகன் சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டார். நேற்று முன் தினம், எம்.ஜி.எம் மருத்துவமனை எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டது. அதில் அவருடைய உடல்நிலை இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவித்தது. அவருக்கு உயிர் பாதுகாப்பு உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இயக்குனர் பாரதிராஜா பாலு எழுந்து வா என்று உனக்காக காத்திருக்கிறேன் என்று எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், எஸ்.பி.பி கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என்பதற்காக நாளை (ஆகஸ்ட் 20) மாலை 6 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் அவருடைய ரசிகர்கள் எஸ்.பி.பி விரைவாக குணமடைய வேண்டி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்க செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்.பி.பி-யை நமக்கு தர வேண்டும் என அனைவரும் இயற்கை அன்னையிடம் பிரார்த்தனை செய்வோம். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள், ஃபெப்சி உறுப்பினர்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடகத்தினர் மற்றும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான எஸ்.பி.பி ரசிகர்கள் ஆகஸ்ட் மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடல்களை பாடி அவரவர் இடங்களில் இருந்து எஸ்.பி.பி விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்.” என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர், “முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் குணமடைந்து வர வேண்டும் என்று பொதுமக்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள். அவர் குணமடைந்து திரும்பி வந்தார். அதே போல, இப்போது எஸ்.பி.பி குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். எஸ்.பி.பி அன்பின் விதைகளை மட்டுமே விதைத்துச் சென்றுள்ளார். அவர் ஒரு அற்புதமான கலைஞன். விரைவில் அவர் நம்மிடையே திரும்ப வேண்டும். அவரை நாம் மீண்டும் திரும்ப பெறுவோம்” என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"