தயாரிப்பாளர் – பைனான்ஸியர் மீது வழக்கு: இது நியாயமா? டி ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம்

திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?

Director Bharathiraja condemns T Rajendar, Maanaadu movie, Simbu, Suresh Kamatchi, Bharathiraja, மாநாடு திரைப்படம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டி ராஜேந்தர் வழக்கு, இது நியாயமா டி ராஜேந்தருக்கு பாரதிராஜா கண்டனம், T Rajendar case against Maanaadu movie director, Silambarasan

‘மாநாடு’ படம் சேட்டிலைட் உரிமை விற்பனை தொடர்பாக நடிகர் சிலம்பரசனின் தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நிதியாளர் மீது வழக்கு தொடர்வது நியாயமா என்று கேட்டு இயக்குனர் பாரதிராஜா நடிகர் டி. ராஜேந்தருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. மாநாடு திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மாநாடு படம் ரிலீசுக்கு முன்பு பெரிய தடைகளையும் சர்ச்சைகளையும் தாண்டிதான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரிலீசுக்கு க்கு பிறகும் மாநாடு திரைப்படத்தின் சர்ச்சை ஓயவில்லை.

மாநாடு திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்பனை செய்தது தொடர்பாக நடிகர் சிலம்பரசனின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் மாநாடு படத்தின் பிரச்னை இன்னும் தொடர்கிறது.

மாநாடு திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு முதலில் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், தயாரிப்பாளர் – நிதியாளர் ஆகியோர் பேசி பிரச்னையை சரி செய்த பின்னர் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன.

மாநாடு படத்தின் சேட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி. ராஜேந்தர் ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்குக் குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாநாடு படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, மாநாடு திரைப்படம் மறுநாள் திரையரங்குகளில் வெளியாகியது.

மாநாடு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, படத்தின் தயாரிப்பாலர், டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சேட்டிலைட் உரிமையைத் தனியார் தொலைக்காட்சிக்கு விற்க முற்பட்டதாகக் கூறி டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நடிகர் டி.ராஜேந்தருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் பாரதிராஜா கூறியிருப்பதாவது: “தங்கள் மகன் சிலம்பரசன் நடித்து எங்கள் உறுப்பினர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் சம்பந்தமாகத் தயாரிப்பு நிலையிலும், வெளியீட்டு நிலையிலும் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பலமுறை தலையிட்டுப் படம் சுமுகமாக வெளியாக உதவியது தாங்கள் அறிந்ததே.

படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றி பெற்று இன்று சிலம்பரசனின் வியாபாரமும், அவர் மீதான நம்பகத்தன்மையும் வெகுவாக உயர்ந்துள்ளது மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

இந்த வெற்றிக்குப் பின்னால் இதன் தயாரிப்பாளரும், நிதியாளரும் எவ்வளவு இடர்களைத் தாங்கி நின்றார்கள் என்பதை நீங்கள் உட்பட மொத்தத் திரையுலகமும் அறியும். அப்படிப்பட்ட தயாரிப்பாளர், நிதியாளர் இருவர் மீதும் தாங்கள் வழக்குத் தொடுத்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.

‘மாநாடு’ வெளியீட்டுக்கு முந்தைய நாள் மொத்தத் திரையுலகமும் படம் வெளியாக பிரதிபலன் பாராமல் உதவ முன்வந்தது இன்றும் நாம் ஒரு குடும்பமாக இருப்பதற்குச் சான்று.

படத்தின் தொலைக்காட்சி உரிமம் விற்கப்படாததால் அதன் மீதான கடன் தொகைக்கு யாராவது உத்தரவாதம் கொடுத்தால் பணம் தனது கைக்கு வரத் தாமதமானாலும் பரவாயில்லை, படத்தை வெளியாக அனுமதிப்பதாக நிதியாளர் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டதால் தாங்கள் தங்களது மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உத்தரவாதம் தர முனவந்தீர்கள். படம் நன்முறையில் வெளியாகி பெருவெற்றியடைந்து, தொலைக்காட்சி உரிமமும் நல்ல விலைக்கு விற்று, இன்று தயாரிப்பாளரே கடனைத் திருப்பித் தருகிறார்.

ஆனால் திடீரென்று தொலைக்காட்சி உரிமம் எனக்கு சொந்தம் என நீங்கள் கூறியிருப்பது மிகத் தவறான முன் உதாரணம் ஆகும். ஜாமீன்தாரர் சொத்துகளுக்கு உரிமம் கோரமுடியுமா? திரைத்துறையில் மதிப்புமிக்க கலைஞர், ஒரு பாரம்பரியமான வியாபார அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு செய்வது நியாயமா?

ஒரு அமைப்பில் மிக முக்கியப் பொறுப்பு வகிக்கும் தாங்கள் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் தெரியாமலே தெலுங்கில் பிரஸ் மீட் வைத்து கீதா ஆர்ட்ஸ் மூலமாக படத்தை வெளியிட முயன்றது எந்தவிதத்தில் நியாயம்? நீங்கள் அதன் சாதக பாதகங்களை அறியாதவரா?

இதையெல்லாம் சகித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் நஷ்ட ஈடு கேட்டு உங்கள் மீது வழக்குத் தொடுத்தால் உங்கள் நிலை என்னவாகும்? வியாபாரக் குளறுபடிகளை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல், வழக்குப் போட்டும் ஒரு தயாரிப்பாளரை மன உளைச்சலுக்குள்ளாக்கி இருப்பதை தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director bharathiraja condemns t rajendar

Exit mobile version