Karu Palaniappan working for DMK: ’பார்த்திபன் கனவு’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன்.
இந்தப் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதினையும் பெற்றார்.
பின்னர் சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை, சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
அதோடு டி.வி. மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத பேச்சாளராக பங்கேற்று வருகிறார். தனியார் தொலைக்காட்சியில் ’டாக் ஷோ’ ஒன்றை தொகுத்து வழங்கிவரும் இவர், மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சித்துக் கொண்டும் வருகிறார்.
இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலையொட்டி, தி.மு.க சார்பிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும், வி.சி.க வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று, மதுரை தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேஷனுக்கு ஆதரவாக ‘கலைஞர்களின் சங்கமம்’ என்ற கூட்டம் மதுரையில் நடைப்பெற்றது. இதில் கரு.பழனியப்பனுடன், நடிகை ரோகினி, இயக்குநர்கள் கோபி நயினார், ராஜு முருகன், லெனின் பாரதி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அப்போது பேசிய கரு.பழனியப்பன், “நானும் தமிழன் என்று சொல்வது பெரிது இல்லை. அப்படி சொல்பவர்கள் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகத்தில் இருப்பதை போல ஒரே ஒரு பக்கத்தை எழுதி காட்டட்டும். பிறகு சொல்லட்டும் தமிழன் என்று. ஒரு பக்கம் இலக்கிய நடையாகக் கூட எழுத வேண்டாம். ஒரு பக்கம் பிழையில்லாமல் எழுதட்டும்” என்றார்.
இதைத்தொடர்ந்து, இன்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றன.