New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/12/padayappa-2025-07-12-10-58-16.jpg)
படையப்பா திரைப்படத்தில் ஊஞ்சல் சீனை திரையில் பார்ப்பதற்கு மாஸாக இருக்கும். அந்த சீன் உருவான விதம் குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சமீபத்தில் நினைவு கூர்ந்தார்.
சினிமாவை பொறுத்தவரை வணிக ரீதியாக வெற்றி பெறுவது என்பது வேறு; வசூல் ரீதியாக சாதனை படைப்பது என்பது வேறு. ஒரு திரைப்படம் தயாரிப்பாளரின் முதலீட்டை அப்படியே மீட்டு விட்டால், அப்படம் நஷ்டமடையாமல் தப்பியது என்று எடுத்துக் கொள்ளலாம்.
இதேபோல், முதலீட்டை விட அதிக அளவில் வருவாய் கிடைத்தால் அப்படம் லாபம் அடைந்ததாக கூறுவார்கள். ஆனால், அதுவரை வெளியான மற்ற திரைப்படங்களின் வசூலை விட ஒரு படம் அதிகமாக கலெக்ஷன் செய்தால், அப்படத்தை வசூல் ரீதியாக சாதனை படைத்த படமாக எடுத்துக் கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் அப்படி ஒரு வசூல் சாதனை படைத்த திரைப்படமாக படையப்பா திகழ்கிறது. ரஜினிகாந்தின் மாஸ் இமேஜை மேலும் ஒரு படி உயர்த்திய திரைப்படமாக படையப்பாவை கருதலாம். அதில் ரஜினியின் சிகை அலங்காரத்தில் தொடங்கி, உடை வடிவமைப்பு வரை இளமையாக காட்சிப்படுத்தி இருந்தனர்.
அதற்கு ஏற்றார் போல், அறிமுக காட்சியில் பாம்பை பிடிப்பது, காளையை அடக்குவது என்று நிறைய மாஸ் சீன்கள் படத்தில் இடம்பெற்றிருக்கும். எனினும், இவற்றையெல்லாம் விட ஊஞ்சல் சீன் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருந்தது. இந்நிலையில், அந்த ஊஞ்சல் சீன் எவ்வாறு உருவானது என்று பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் நடத்திய ஒரு நிகழ்வில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "படையப்பா திரைப்படத்தில் ஊஞ்சல் சீன் முன்னதாகவே திட்டமிடப்பட்டது கிடையாது. படப்பிடிப்பு தளத்தில் சென்ற பார்த்த போது, காட்சியை படமாக்குவது குறித்து திட்டமிட்டோம். அறையில் இருந்த அனைத்து நாற்காலியையும் அகற்றி விட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
முதலில் ஊஞ்சலையும் அகற்றலாம் என்று நினைத்தோம். பின்னர், தான் ஊஞ்சலை கொண்டு காட்சியை வடிவமைக்கலாம் என்று சட்டென யோசனை வந்தது. ஃப்ரேமில் பார்க்கும் போது ஊஞ்சல் தெரியாத வகையில் காட்சிப்படுத்தினோம்.
பின்னர், துண்டை போட்டு இழுத்தால் ஊஞ்சல் வருகிறதா என 4 முறை நான் செய்து பார்த்தேன். நான் செய்த போது கேவலமாக இருந்தது. ஆனால், ரஜினிகாந்த் அந்த சீனை மாஸாக மாற்றி விட்டார்" என்று கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.