/indian-express-tamil/media/media_files/2025/07/25/heisenberg-2025-07-25-16-37-34.jpg)
'லியோ' உள்ளிட்ட சில படங்களில் பாடல் எழுதிய ஹைசன்பர்க் யார் என்பதற்கான விடை, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இருக்கிறது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் கலாட்டா பிளஸ் யூடியூப் சேனலுடனான நேர்காணலின் போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இப்படத்தில், சத்யராஜ், ஷ்ருதி ஹாஸன், உபேந்திரா, நாகார்ஜுனா, ஆமீர் கான் என பெரும் ரசிகர் பட்டாளமே நடித்துள்ளனர். பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி வரும் கூலி, ரூ. 1000 கோடி வசூல் சாதனை படைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளுக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.
முன்னதாக, 'லியோ' திரைப்படத்தில் 'பிளடி ஸ்வீட்' பாடலை எழுதிய ஹைசன்பெர்க்-உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது என்று இசையமைப்பாளர் அனிருத்திடம் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, ஹைசன்பெர்க்-உடன் தொலைபேசியில் மட்டுமே தாம் பேசியதாகவும், அவரை நேரில் பார்த்தது லோகேஷ் கனகராஜ் தான் எனவும் அனிருத் பதிலளித்தார். அந்த வகையில், யார் அந்த ஹைசன்பெர்க் என லோகேஷிடம் சமீபத்திய நேர்காணலில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "முதலில் நான் தான் ஹைசன்பெர்க்-ஐ பார்த்தேன். அதற்கடுத்து அனிருத்தையும், ஹைசன்பெர்க்-ஐயும் சந்திக்க வைத்தேன். ஹைசன்பெர்க் யார் என்று கூறி அவரது அடையாளத்தை வெளிப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஆனால், உண்மையாகவே ஹைசன்பெர்க் என்ற நபர் இருக்கிறார்.
மேலும், ஹைசன்பெர்க் என்பது அவருக்கு நாங்கள் வைத்த பெயர். அவரது உண்மையான பெயர் வேறு ஒன்று. 'வறுமையின் நிறம் சிவப்பு' திரைப்படம் பார்த்திருந்தால், ஹைசன்பெர்க் யார் என்பதற்கான விடை கிடைத்து விடும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.