/tamil-ie/media/media_files/uploads/2022/11/lokesh.jpg)
கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்ட் செட்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் இவர், அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கியுள்ள பிரம்மாண்டமான 'கூலி' படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், தனது முதல் படத்திற்காக தாய்லாந்தில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளியாகி திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ள ஆக்ஷன் எண்டர்டெய்னர் படம் மூலமாக லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இந்த படத்திற்கான பிரத்தியேக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிகளை லோகேஷ் தாய்லாந்தில் மேற்கொண்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'கைதி 2' படத்திற்கு முன்பே அருண் மாதேஸ்வரன் உடனான தனது ஹீரோ அவதாரப் படத்தை லோகேஷ் முடிப்பார் என்றும், அதன்பிறகு கார்த்தி நடிக்கும் 'கைதி 2' பட வேலைகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
'கைதி 2' படத்திற்குப் பிறகு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானுடன் இணைந்து லோகேஷ் ஒரு படத்தை இயக்க உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கூலி' திரைப்படம், ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூலி படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில், சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தும் சத்யராஜும் மீண்டும் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளனர்.
1986 இல் வெளியான சூப்பர்ஹிட் தமிழ்ப் படமான 'மிஸ்டர் பாரத்' படத்தில் இவர்கள் இருவரும் கடைசியாக ஒன்றாக நடித்தனர், அதில் சத்யராஜ் ரஜினிகாந்தின் தந்தையாக நடித்திருந்தார். ஆச்சரியப்படும் விதமாக, சத்யராஜ் ரஜினிகாந்தின் முந்தைய படங்களான 'எந்திரன்' மற்றும் 'சிவாஜி' போன்ற சில படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை மறுத்திருந்தார். ரஜினிகாந்தின் 171வது படமான 'கூலி', தங்கக் கடத்தலை மையமாகக் கொண்ட ஒரு படமாக இருக்கும். இந்த படம் ஒரு தனி படமாக இருக்கும் என்றும், தனது லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் (LCU) இன் ஒரு பகுதியாக இருக்காது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
'கூலி' படத்தில் ரஜினிகாந்த் தவிர, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபே மோனிகா ஜான், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற பிற திரை உலக பிரபலங்கள் இப்படத்தில் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.