Advertisment

இயக்குநர் மகேந்திரன் : தமிழ் திரை உலகமே கொண்டாடிய அந்த மூன்று படங்கள் !

இந்த 3 படங்களையும் 30 வருடங்கள் தாண்டியும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வர ஒரே காரணம் இயக்குநர் மகேந்திரன் தான்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Director Mahendran Famous Tamil Films

Director Mahendran Famous Tamil Films : சில நாட்கள் நாம்  சில படங்கள் பார்ப்போம். அது காலம் முழுவதும் நெஞ்சுக்குள் ஒட்டிக் கொள்ளும். வறுமையின் நிறம் சிகப்பு படம் பார்த்து தன் நிலைமையோடு ஒப்பீடு செய்து கொண்டு வெறும் வயிற்றோடு உறங்கச் சென்ற வேலையில்லாம் தன் மானம் மிக்க இளைஞர்கள் சமூகத்தை வார்த்தெடுத்ததும் கூட தமிழ் சினிமா தான். இல்லை பிரதிபலித்தது தமிழ் சினிமா தான்.

Advertisment

பாலு மகேந்திரா, பாலச்சந்தரன் என்று நமக்கு பிடித்த படங்களை அளித்த இயக்குநர்கள் பட்டியலிலும் கூட தனித்து தெரிந்தவர் இயக்குநர் மகேந்திரன்.   உதிரிப் பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் - இந்த மூன்று படங்கள் போதும், ஒரு சராசரி மனிதனின் வாழ்வு எத்தகைய முறையில் கட்டமைக்கப்பட்டு உள்ளது, அவன் எப்படி வாழத் தளைப்பட்டு எப்படி சந்தர்ப்ப சூழலை குற்றம் சொல்லும் குற்றவாளி ஆகின்றான்  என்பதை அனைவரும் அறிந்திட.

இவன் இவ்வாறானவன், இவளோ ரதி, இவனோ ஆயிரம் பேரை ஒற்றைக் கையால் தாக்குவான் என்று ஒப்பனைகள், உவமைகள் அனைத்தையும் துடைத்தெறிந்துவிட்டு மனிதர்கள் வாழ்வு இப்படி தான், அவர்கள் இப்படி தான் நடந்து கொள்வார்கள். இது தான் அவர்கள் இயல்பு என்ற, சினிமாவிற்கு அப்பாற்பட்ட உண்மை உலகை படம் பிடித்து காட்டியவர் மகேந்திரன்.

ஜானி

Director Mahendran Famous Tamil Films ஜானி திரைப்படத்தில் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி

இன்றைய காலக்கட்டத்தில் நடிக்க வரும் அனைத்து பெண் நடிகர்களுக்கும் ஒரு கனவு, ஒற்றைக் கனவு, சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே லட்சியம் என்றால் அது அர்ச்சனவாக நடித்துவிட வேண்டும் என்பது தான். அதில் சரி பாதியை நடித்துக் காட்டினால் கூட அது மாபெரும் வெற்றி தான் என்ற இலக்கை நமக்கு அளித்துச் சென்றவர் மகேந்திரன்.

ஒரு இசைக்கலைஞராக,  பாடகியாக வலம் வரும் அர்ச்சனாவின் கனவாகவே மாறிவிடும் ஒரு திருடன் ஜானி.  தன் காதலின் பயணம் பாதியில் ஜானியால் தொலைந்து போக, காதலனுக்காக காத்திருக்கும் ஒரு காதலியாக மிரட்டியிருப்பார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் சிறந்த நடிப்பிற்கு இன்றும் எடுத்துக்காட்டாய் பிரம்மாண்டமாய் நிற்கிறது ஜானி என்றால் அதனை மறுத்து கூறுவோர் யார்?

தங்கப்பதக்கம், ரிஷிமூலம் என்று பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதினார். சுமார் 26 படங்களுக்கு திரைக்கதை எழுதிய பின்னரே தன்னை இயக்குநராக உருமாற்றிக் கொண்டார். 1980ம் ஆண்டு மோகன் மற்றும் சுஹாசினி ஆகியோரை நடிப்பில் உருவான நெஞ்சத்தைக் கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது.

மேலும் படிக்க : பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்… பேரிழப்பை சந்தித்த தமிழ் சினிமா!

மொத்தம் 12 படங்களை தான் இயக்கினார் மகேந்திரன் :

எழுத்து என்னும் மோகவலையில் தன்னை வார்த்தெடுத்த மகேந்திரன் தன்னுடைய வாழ்நாளில் வெறும் 12 படங்களுக்கு மட்டும் தான் இது நாள் வரையில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, ஜானி, மெட்டி, கை கொடுக்கும் கை, நண்டு, அழகிய கண்ணே, ஊர் பஞ்சாயத்து, சாசனம், கண்ணுக்கு மை எழுது என்று மொத்தமே 12 படங்கள் தான் இயக்கியுள்ளார்.

Director Mahendran Famous Tamil Films ஜானி படப்பிடிப்பில் ரஜினியுடன் மகேந்திரன்

வாழ்வில் ஒன்றை விட மற்றொன்று உயர்ந்ததாகத்தான் இருக்கும். அதை தேடிக்கொண்டே போனால் கையில் இருக்கும் பொக்கிஷமும் கனவாகிவிடும். துணிக்கடை ஒன்றில் வித்யாசாகர் (ரஜினி காந்த்) பாமாவிடம் (தீபா) பேசும் வார்த்தைகள் இன்றைய நாள் வரை எத்தனையோ நபர்களின் வாழ்வை மாற்றிய தருணங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.  ஜானி படத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காட்சி என்றால் வித்யாசாகர் பாமாவிடம் பேசும் இந்த ஒரு காட்சி தான். ஆம் அன்று சினிமா மக்களின் வாழ்வை மாற்றும் சக்தியாக இருந்தது.

குடும்பம்

துக்ளக் பத்திரிக்கையில் நான்கு வருடங்கள் உதவி ஆசிரியராக தன்னை மெருகேற்றிக் கொண்டவர் மகேந்திரன்.  தேவ அலெக்சாண்டர் என்ற இயற்பெயர் கொண்டவர் மகேந்திரன்.  தந்தை ஜோசப் செல்லையா. அம்மா மனோன்மணி.

இவருடைய மனைவி ஜாஸ்மின். இவருக்கு ஜான் ரோஷன் என்ற மகனும், டிம்பிள் ப்ரிதம் மற்றும் அனுரிட்டா ப்ரிதம் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். கல்லூரி படிக்கும் போது ஓட்டப்பந்தய வீரராக வலம் வந்தவர் இவர்.

கெட்டப்பையன் சார் இந்த காளி

முள்ளும் மலரும் : இன்று வரை செந்தாழம் பூவை மறந்தவர்கள் யார் ? அந்த பயணம்... சோபாவும் சரத்பாபுவும். காளி என்று காளி படத்திலும், இப்போது வந்த பேட்ட படத்திலும் ரஜினியின் கதாப்பாத்திரம் அமைந்திருந்தாலும், முள்ளும் மலரும் படத்தில் “ரெண்டு கையும் காலும் இல்லைன்னாலும் பொழச்சுக்குவான் சார் காளி.... கெட்டப்பையன் சார் இந்த காளி”... இந்த காளியை என்றும் மக்கள் மறக்காத வண்ணம் உயிர் கொடுத்தவர் மகேந்திரன்...

Director Mahendran Famous Tamil Films

எதார்த்த மனிதர்களின் வாழ்வை சினிமாவாக்கிக் கொண்டிருந்தார் இந்த இயக்குநர்.  கதைகளை படமாக்குவதில் ஒரு பேட்டர்னையே உருவாக்கி வைத்திருந்தார் மகேந்திரன். எடுக்கப்பட்ட அனைத்துப் படங்களும் 40 நாட்களுக்குள் எடுக்கப்பட்டவை தான். உதிரிப்பூக்கள் வெறும் 30 நாட்களில் படமாக்கப்பட்டது.

Director Mahendran Famous Tamil Films

தமிழ் சினிமா உலகம் வியந்து பார்த்த ஒரு க்ளைமேக்ஸ்

உதிரிப்பூக்கள் - தமிழ் சினிமா தன் வாழ்நாளிலும் கண்டிடாத ஒரு க்ளைமேக்ஸிற்கு பார்வையாளர்களை அழைத்துச் சென்ற திரைப்படம்.  விஜயன் தன் முதல் மனைவி அஸ்வினி இறந்தவுடன் தன் அம்மாவிற்காக மற்றொரு திருமணம் செய்துகொள்கின்றார். அஸ்வினியின் தங்கை மதுமாலினியை இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ள முயன்று தோற்றுவிட, அவருக்கோ வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்காக அவரிடம் தவறாக நடக்க முயல்கின்றார் விஜயன்.

அதை நேரில் கண்ட இரண்டாம் மனைவி சில நாட்களில் தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக முயற்சி மேற்கொள்ள, விஜயன் அதனை தடுப்பார். அப்போது “உங்களை தள்ளிவிட்டு போற அளவுக்கு எனக்கு தெம்பில்லாம இருக்கலாம். ஆனா மறுபடியும் இந்த வீட்டுக்கு நான் வந்து, சமைச்சு போட்டு, அந்த சாப்பாட்டுல வெஷத்தை கலக்க என்னால முடியும் இல்லையா” என்று கூறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் அந்த பெண்.

அந்த படத்தில் யாரும் நல்லவர்களும் இல்லை கெட்டவர்களும் இல்லை. விஜயன் உட்பட. ஆழ்மன எண்ணங்களை அலசி பார்க்கும் போது நல்லதிற்கும் கெட்டதிற்குமான கோட்டினை நாம் தான் உருவாக்குகின்றோம் என்பதை மீண்டும் ஆணித்தரமாக உணர்த்திய படம் என்றால் அது உதிரிப் பூக்கள் தான்.

Director Mahendran Famous Tamil Films

இந்த மூன்று படங்களையும் 30 வருடங்கள் தாண்டியும் தமிழ் திரையுலகமும், தமிழ் ரசிகர்களும் கொண்டாடி வர ஒரே காரணம் எது என்றால் அது இயக்குநர் மகேந்திரன் தான்.  கலைப்படைப்புகளுக்காக தன்னை மெருக்கேற்றிக் கொண்டவர் அவர். ஒவ்வொரு படத்திலும் நேர்த்தியை கடைபிடித்து எங்கும் சமரசம் செய்யாமல் திரைப்படங்களை கொடுத்தவர் மகேந்திரன்.

திரைத்துறை வேண்டாம் என்று மூன்று முறை காரைக்குடிக்கு திரும்பியவரை மீண்டும் மீண்டும் அழைத்து வந்து இந்த உலகில் கட்டிப் போட்டவர் எம்.ஜி.ஆர். அதனால்  தான் 81ல் அவர் திரைப்படம் வாங்கிய மூன்று தேசிய விருதுகளையும் எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்தார்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment