தமிழ் சினிமாவில் அஜித் குமார், தனது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் ரசிகர்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்துபவர். ஒருமுறை படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விபத்து, அவரது அசைக்க முடியாத மன உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. இதுகுறித்து இயக்குனர் மனோபாலா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஜீ, அட்டகாசம், வில்லன், வரலாறு போன்ற படங்களில் அஜீத்தும் இயக்குநர் மனோபாலாவும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் அஜீத்தின் நடிப்பும் ஈடுபாடும் குறித்து இயக்குநர் மனோபாலா நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். அஜித் ஒரு கார் மீது ஓடும் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. சவாலான அந்தக் காட்சியை, 'நான் செய்கிறேன்' என்று கூறி, அஜித் தானே முன்வந்து செய்ததாக மனோபாலா தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தொடங்கியதும், தட்டையான கார்கள் மீது அஜித் எளிதாக ஓடிவந்தார். ஆனால், நடுவில் வளைந்திருந்த ஒரு அம்பாசிடர் கார் மீது கால் வைத்ததும், நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டு விழுந்தார். இந்த விபத்து அங்கிருந்த அனைவரையும் பதற வைத்தது. உடனடியாக இரண்டு சண்டை கலைஞர்கள் அவரைத் தூக்கினர். அஜித் வலியால் துடித்தாலும், "மாஸ்டர், இன்னும் என்னென்ன பண்ணனுமோ சீக்கிரம் எடுங்கள், நான் பார்க்கிறேன்" என்று கூறியதாக மனோபாலா தெரிவித்தார். வலியை கூட பொருட்படுத்தாமல் சூட்டிங்கை முடிக்க வேண்டும் என்று அர்ப்பணிப்போடு அவர் பணியாற்றியதாக மனோபாலா கூறினார்.
அவரது இந்த அர்ப்பணிப்பைக் கண்டு வியந்த படக்குழுவினர், அவரை சென்னைக்குத் திரும்பி ஓய்வெடுக்கச் சொன்னார்கள். ஆனால், அஜித் "முடியாது மாஸ்டர், ஒர்க்கை முடித்துவிட்டுத்தான் போவேன்" என்று உறுதியாகக் கூறி, அந்த விபத்துக்குப் பிறகும் 48 மணி நேரம் நின்று கொண்டே நடித்து, காட்சிகளை முடித்துக்கொடுத்ததாகவும் கூறினார். அஜித்தின் இந்த அர்ப்பணிப்பு, அவரது ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் இருக்கும் கடின உழைப்பையும், தொழில் பக்தியையும் வெளிப்படுத்துவதாகவும் இதுவே அவரை லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் 'தல'யாக நிலைநிறுத்தியுள்ளது என்றும் கூறினார்.
Posted by Saravanan Saro on Saturday, May 3, 2025