நடிகரும் இயக்குனருமான மனோபாலா மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவரது மனைவியின் செயல் குறித்து பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் மனோபாலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அவர், 1982-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான ஆகாய கங்கை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிகளை கொடுத்துள்ள மனோபாலா நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். இவரின் காமெடி காட்சிகள் இன்றைய தலைமுறை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் இயக்குனர் என்று இல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறிய மனோபாலா சதுரங்க வேட்டை என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து எச்.வினோத் என்ற இயக்குனரை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த மனோபாலா கடந்த மே 3-ந் தேதி திடீரென மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக தமிழகத்தில் இறந்தவரின் ஆடைகளை எரிப்பது வழக்கம். ஆனால் மனோபாலாவின் மனைவி உஷா, மனோபாலாவின் அலமாரியை ஆதரவற்றோர் பயன்படுத்துவதற்காக ஆதரவற்றோர் இல்லத்திற்கு நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உஷா தனது கணவர் அணிந்திருந்த கடிகாரத்தை மட்டுமே வைத்துக்கொண்டார் என்றும், அவருடைய உடைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பிற பொருட்கள் என அனைத்தையும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல போராடும் நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டு மனோபாலா திரையுலகில் உள்ள அனைவருடனும் மிகவும் நட்பாக பழகியவர்.
இரு தொழிற்சங்கங்களுக்கு இடையே தவறான புரிதல் அல்லது மோதல் இருந்தால் இடையில் சாமாதானம் செய்து வைக்க மனோபாலாவை கூப்பிங்கள் என்று சொல்லும் அளவுக்கு அனைவருடனம் நட்புறவை கடைபிடித்தவர். ஆனால் தற்போது அவர் இறந்தது அவரை நம்பி இருந்த பலருக்கும், நெருக்கமானவர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“