தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாமன்னன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் நேற்று கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர். இது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மாமன்னன். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக பேசப்பட்ட நிலையில், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வடிவேலு இருவரும் மேடையில் பாடல் பாடி அசத்தினர். தொடர்ந்து இந்த விழாவில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ் கமல்ஹாசன் மேடையில் இருக்கும்போதே தேவர்மகன் படம் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தேவர் மகன் திரைப்படம் தனக்குள் மனபிறழ்வை உண்டாக்கியது. அந்த படம் சரியா... தவறா என புரியாமல் மனதிற்குள் அப்படி ஒரு வலியை ஏற்படுத்தியது என்று மாரி செல்வராஜ் கூறியது சமூகவலைதளங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. கடந்த சில வாரங்களாக இந்த கருத்து தொடர்பான விவாதம் இணையத்தில் பெரும் வைரலாக பரவிய நிலையில், தேவர் மகன் படத்தில் உள்ள வடிவேலுவின் எசக்கி கேரக்டர் தான் மாமன்னன் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்த மாரி செல்வராஜ், தேவர் மகன் படத்தில் வடிவேலு நடித்த இசக்கி கேரக்டர்தான் நான் மாமன்னன் படத்தின் கதையை எழுதுவதற்கு காரணம். மாமன்னன் படம் பற்றி பேசும்போது இசக்கி கேரக்டர் பற்றி பேசாமல் இருக்க முடியாது. அதனால் அந்த மேடையில் அப்படி பேசினேன் கமல் அதை புரிந்து கொண்டார் எனக்கும் கமல் சாருக்கும் இடையே நடந்த உரையாடல், என் எமோஷன் என கூறியிருந்தார்.
இதனிடையே மாமன்னன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நேற்று உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ், கமல்ஹாசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது தொடர்பாக மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பதிவில் பெரும் ப்ரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும் என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக்கொண்ட கலைஞானி கமல் சாருக்கு இதயத்திலிருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“