இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் நடத்தும் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ், கானா, ராப் இசை நிகழ்ச்சியை, இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் 28ம் தேதி ஆன்லைன் வழியாக நடத்தப்படும் அறிவித்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் சினிமா உலகில் வெளிப்படையாக தலித் அரசியலை பேசுபவர். சாதி ஒழிப்பை வலியுறுத்துபவர். அதை பேச்சளவில் மட்டுமல்லாமல் செயல்பாட்டிலும் நடைமுறைப்படுத்தி வருபவர். சாதி பேதத்தால் பிளவுபட்டு கிடக்கும் சமூகங்களை கலை இலக்கியத்தால் ஒன்றாக இணைக்க முடியும் என்று கருதுபவர். அதனால்தான், பா.ரஞ்சித் கலை இலக்கியங்கள் வழியாக உரையாடலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
கடந்த 3 ஆண்டுகளாக சென்னையில் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற பெயரில் சென்னை நகர தலித்துகளின் இசையான கானாவையும் கருப்பின மக்களின் இசையான ராப் இசையையும் இணைத்து ஒரு இசைக் கலவையாக இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் அமைப்பின் மூலம் பல்வேறு தலித் அரசியல் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். 2018-ம் ஆண்டு சென்னையில் தலித் அரசியல் முன்னோடி தலைவர்களை சிலையாக வடிக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ஆகிய 2 படங்களைத் தயாரித்துள்ளார். மேலும், சில புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டங்களை தொடங்கியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என தொடர்ந்து 2 படங்களை இயக்கிய பா.ரஞ்சித், நடிகர் ஆர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படம் சென்னையில் இருந்த குத்துசண்டை மரபுகளைப் பற்றிய ஒரு பீரியாடிக் படம் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளதால், நிகழ்சிகள் நடத்துவதற்கு மக்கள் கூட்டமாக கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு கேஸ்ட்லெட் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சியின் தலைப்பாக ‘மகிழ்ச்சி’ என்று உற்சாகம் பொங்க முழங்கியுள்ளனர். இதனை அறிவிக்கும் விதமாக கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வின் மகிழ்ச்சி ட்ராக் யூடியுப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (சாதியற்றவர்களின் ஒன்றினைவு) இசை நிகழ்ச்சியை பிரபல காணா பாடகர்கள், அறிவு, ராஜேஷ், இசைவாணி, முத்து, இசையமைப்பாளர் டென்மா, ராப் பாடகர் டோப் டேடி, அக்ஷிதா உள்ளிட்டோர் வழங்க உள்ளனர்.
இந்த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவால் முடங்கிள்ள மக்களை கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்வின் மகிழ்ச்சி இசை உற்சாகப்படுத்தி மீண்டெழச் செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.