இயக்குனரும் நடிகருமான ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும், லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் தேசிய விருது அறிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தேசிய விருது அறிவிக்கப்படவில்லை, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று ஆர்.பார்த்திபன் கூறியுள்ளார்.
மத்திய அரசு இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு விருது வழங்கி வருகிறது. அதன்படி, 2019ம் ஆண்டு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இயக்குனர் பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படத்திற்கும், லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் திரைப்படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், இயக்குனர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு அதை மறுக்கும் விதமாக உள்ளது. இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை தேசிய விருதாக ஊடகங்கள் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார். அப்படியானால், என்ன நடந்தது.
இது குறித்து ஆர்.பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏற்கனவே இந்தியன் பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மத்திய அரசின் செய்தி அறிக்கை வெளியிட்டதை ’தேசிய விருதா’ய் ஊடகங்கள் கொண்டாடியதை புரிந்துக் கொள்ள முடிந்தது. உலகெங்கும் பாராட்டுக்கள். மணியோசை முன்னரே வந்துவிட்டது, யானை வரும் பின்னே! பின்னே வேறென்னச் சொல்லி சமாளிப்பது.?” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆர்.பார்த்திபன் எழுதி இயக்கி நடித்த படம் ஒத்த செருப்பு அளவு 7. இந்த படத்தில், பார்த்திபன் புதிய முயற்சியாக படம் முழுவது, ஒரே நடிகராக நடித்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தாலும் பார்வையாளர்களுக்கு சுவாரசியம் குறையாமல் படத்தை நகர்த்திச் சென்றிருப்பார். இந்த படத்தை சினிமா துறையினர் மட்டுமில்லாமல், அரசியல் வாதிகளும் பாராட்டியிருந்தனர்.
அதே போல, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்ற திரைப்படத்தை இயக்கிருந்தார். இந்த படமும் கவனம் பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"