இயக்குநரும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருமான ஒருவர், போக்குவரத்து போலீஸார் இருவரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். இது குறித்து, பாதிக்கப்பட்ட அந்த இயக்குனர் தனது சமூக வலைதள பதிவு மூலம் தெரியப்படுத்த, மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை தந்து, காதல் நாயகனாக இருந்த விஜய்யை, ஆக்ஷன் நாயகனாக அடையாளப்படுத்திய படம் ’திருமலை’. இந்தப் படத்தை இயக்கியவர் ரமணா சந்திரசேகர். அதோடு விஜய்யின் மற்றொரு படமான ‘ஆதி’யையும் இவர் தான் இயக்கியுள்ளார். அதோடு தனுஷின் ‘சுள்ளான்’ படத்தையும் இயக்கிய இவர், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதால், மேற்படி படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொண்டார். தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டார்.
போலீஸாரின் தாக்குதலுக்கு ஆளான இயக்குநர் ரமணா தனது முகநூலில், “கண்ணியம்மிக்க காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. நான் சந்திக்க நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் குமரன், காவலர் ராமர் ஆகிய இருவரும் அந்தக் கண்ணியமான, நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல், ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத்தகுதியற்றவர்கள்.
இன்று காலை நான்,என் மனைவி, மகள் உட்பட காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் காவல்துறை சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது.
சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தை திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் M. ராமர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாக சொல்லி அபராதம் கட்ட சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசன்சை காண்பிக்கச்சொல்லி வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளர் K. குமார். அவர்களிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.
அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசன்சை தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.
அப்போது அந்த மனித பண்பாளர் உதவி ஆய்வாளர் திரு. K. குமார். அவர்கள் என்னை பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா.. மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற கேன்சரால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படி பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்" என மிகுந்த வலியோடு நீள் பதிவொன்றை எழுதியிருக்கிறார். இது முகநூலில் மிகப்பெரியளவில் வைரலானது.
போலீஸாருடன் வாக்குவாதம் செய்த பின்னர் அங்கிருந்து கிளம்பிய ரமணா, தனது ஓட்டுநர் உரிமத்தை வாங்க மறந்துவிட்டதை பின்னர் தான் உணர்ந்திருக்கிறார். அதைப் பெற அவர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் உரிமத்தை திருப்பித் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
ஃபைன் கட்டாமல் உரிமத்தை தர முடியாது என மீண்டும் பிரச்னை செய்திருக்கிறார்கள். பின்னர், காருக்குள் இருந்த ரமணாவின் மகள் அபராதத்தை செலுத்தி உரிமத்தை பெற்றிருக்கிறார்” என ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சி.சி.டி.வி காட்சிகளில் ரமணா யூ டர்ன் போட, அவசரப்பட்டது தெரியவந்துள்ளதாகவும், அதனால் தான் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், ஆடியோ இல்லாததால் இயக்குநரின் குற்றச்சாட்டுகளை உயரதிகாரிகளால் சரிபார்க்க முடியவில்லை. ரமணாவை துன்புறுத்தல் செய்யவில்லை என, இரு போலீஸ்காரர்களும் மறுத்துள்ள நிலையில், உயர் அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தவிர, அசிஸ்டெண்ட் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ஷோபனா ரமணாவின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரித்துள்ளனர்.