/tamil-ie/media/media_files/uploads/2021/11/RNR-Manohar.jpg)
தமிழ் சினிமாவில், இயக்குநர், நடிகர், வசனகர்த்தா என வெற்றிகரமாக வலம் வந்தவர் இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர். இவர் 1993ம் ஆண்டு வெளியான சரத்குமார் ஹீரோவாக நடித்ட 'பேண்டு மாஸ்டர்' என்ற படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணி புரிந்தார். அதன் பிறகு, ஐ.வி.சசி இயக்கத்தில் வெளியான 'கோலங்கள்' படத்தில் வசனகர்த்தாவாக பணி புரிந்தார். அதே படத்தில், முதன் முறையாக திரையில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார். இதையடுத்து, விஜயகாந்த் நடித்த 'தென்னவன்' படத்துக்கு வசனம் எழுதினார்.
இயக்குநர் ஆர்.என்.ஆர் மனோகர், 2009ம் ஆண்டு நடிகர் நகுல் ஹீரோவக நடித்த 'மாசிலாமணி' படத்தை இயக்கினார். தொடர்ந்து, நடிகர் நந்தா ஹீரோவாக நடித்த 'வேலூர் மாவட்டம்' திரைப்படத்தை இயக்கினார். வேலூர் மாவட்டம், தமிழ் சினிமா உலகில் அவரை கவனிக்க வைத்தது.
ஆர்.என்.ஆர் மனோகர் இயக்குனராக மட்டுமில்லாமல் , 'சலீம்', 'என்னை அறிந்தால்', 'நானும் ரவுடிதான்', 'வேதாளம்', 'மிருதன்', 'கைதி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர், நடிகர், ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் இன்று (நவம்பர் 17) திடீரென மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61. இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகரின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர், நடிகர், ஆர்.என்.ஆர்.மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர், திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் ஆவார். மேலும், ஆர்.என்.ஆர்.மனோகரின் மகன் ரஞ்சன் கடந்த 2012ம் ஆண்டு சென்னையில் பிரபல தனியார் பள்ளியில் நீச்சல்குளத்தில் மூழ்கி பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவிற்கு வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.