scorecardresearch

சீட்டு ஆடுவார்… ஆனா தோத்துக்கிட்டே இருப்பார்..! யாரும் அறியாத விஜயகாந்தின் இன்னொரு முகம்

விஜயகாந்த் சூட்டிங் முடிந்து சீட்டு ஆடுவார். ஆனால், தோத்துக்கிட்டே இருப்பார். ஜெயிக்கவே மாட்டேங்கிறீங்க. எதுக்கு சீட்டு ஆடுறீங்க என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் நெகிழ்ச்சியாக இருந்தது என்று எஸ்.ஏ.சி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சீட்டு ஆடுவார்… ஆனா தோத்துக்கிட்டே இருப்பார்..! யாரும் அறியாத விஜயகாந்தின் இன்னொரு முகம்

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜயகாந்த்தின் யாரும் அறியாத இன்னொரு முகத்தைப் பற்றி கூறியிருக்கிறார். அவர் சூட்டிங் முடிந்து சீட்டு ஆடுவார். ஆனால், தோத்துக்கிட்டே இருப்பார். ஜெயிக்கவே மாட்டேங்கிறீங்க. எதுக்கு சீட்டு ஆடுறீங்க என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் நெகிழ்ச்சியாக இருந்தது என்று எஸ்.ஏ.சி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் யூடியூப் சேனலில் யார் இந்த எஸ்.ஏ.சி என்று தனது சினிமா அனுபவங்களைக் கூறி வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அந்த வரிசையில், வெட்ட வந்தவர்களை அடித்து விரட்டிய விஜயகாந்த் என்று தலைப்பிட்டு, நடிகர் விஜயகாந்த் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அந்த வீடியோவில், இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருப்பதாவது: “என்னுடைய அசிஸ்டன்ஸ் கொச்சினை சுத்திப் பார்க்கனும்னு ஆசைப்பட்டாங்க. கேரளாவில் கொச்சினை ஒரு சொர்க்க பூமி என்று சொல்வார்கள். கேரளாவை கடவுளின் தேசம் என்று சொல்வார்கள். எங்கே பார்த்தாலும் ஒரு இயற்கை அழகு இங்கேயே வாழ்ந்துவிடலாமா என்று தோன்றுகிறது.

இன்றைக்கு நான் பேசப் போற தலைப்பு நானும் விஜயகாந்த்தும். எங்கள் இருவருக்கும் அன்று முதல் இன்று வரைக்கும் இருக்கும் பாசமான அந்த பந்தம். அவருக்கு நான், சட்டம் ஒரு இருட்டறை முதல் படம், அதிலிருந்து அவர் ஒவ்வொரு மாசமும் 1 ஆம் தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரைக்கும், உங்க டேட். நீங்கள் எந்த புரொடியுசர்னா பேசிக்குங்க. எனக்கான சம்பளத்தையும் நீங்களே பேசிடுங்க. இதில இப்ராஹிம் ராவுத்தர் தலையிடமாட்டார் என்றார். 1 ஆம் தேதியில் இருந்து 10 ஆம் தேதி வரைக்கும் யார் கொடுக்கலைனாகூட நான் கொடுக்கிறேன்.

அதாவது என்னைவிட பல வெற்றிகளைக் கொடுத்த ஆர். சுந்தரராஜன், ஆர்.கே. செல்வமணி, இவர்கள் எல்லாம் அவருக்கு நிறைய வெற்றிகளைக் கொடுத்தார்கள். ஆனால், என்னை மட்டும் பெயர் சொல்ல மாட்டார். எங்க டைரக்டர், அவர் மனசுல எனக்குனு ஒரு தனி இடம் இருந்தது. அது ஒரு சந்தோஷமான விஷயம். ஒருமுறை, படத்தினுடைய வெற்றி. சாட்சி என்று நினைக்கிறேன். சாட்சி வெற்றி விழா, நாங்கள் மதுரைக்கு போய்விட்டு, மதுரையில் இருந்து திருச்சிக்கு போகிறோம். சங்கம் ஹோட்டலில் பார்த்தால் ஒரு பத்தாயிரம் இருபதாயிரம் பேர் இருக்கிறார்கள். அதுல அவர் இறங்கி போயிவிட்டார் என்றால் என்னால போக முடியாது. அங்க அவர் என்ன பண்ணார்னா முதலில் இறங்கி, கைகளை முன்னே நீட்டி வைத்துக்கொண்டு அவர் கைகளுக்குள் என்னை வைத்துக்கொண்டு அப்படியே போகிறார். யாராவது வந்தார்கள் என்றால், அவர் இரண்டு கையால அப்படி தள்ளிவிடுவார் பாருங்கள் இந்த பக்கம் பத்து பேர் விழுவாங்க, அந்த பக்கம் பத்து பேர் விழுவாங்க, அப்படி நிஜ ஹீரோ அவர். அப்படி என் மேல ஒரு அன்பு, பாசம், ஒரு ஈடுபாடு, என்னை ஒரு அண்ணன் மாதிரி அவர் பார்த்துக்கொண்டார். அடுத்து நான் ஒரு 7-8 படங்கள் பண்ணிட்டேன். திடீர்னு எனக்கு ஒரு ஆசை. அவரை ஏதாவது ஒரு டிஃபரண்ட்டான கேரக்டரில் நடிக்க வைத்தால் எப்படி இருக்கும்னு? அப்படினு சொல்லிட்டு நான் அப்போ சொன்னேன், நான் ஒரு ஆண்ட்டி கேரக்டர் இருக்கு பண்றீங்களானு கேட்டேன். அவர் பொதுவா எங்கிட்ட கதையே கேட்க மாட்டார். ஒன் லைன்ல சொல்வேன். அவர் வேண்டாம் சார் நான் பண்றேன் சார்னு சொல்வார்.

டிஃபரண்ட்டா ஒரு ஆண்ட்டி கேரக்டர் பண்ணலாமா, ஒரு ஹீரோவா எல்லாமே தெரிஞ்சிருக்கனும். சரி சார் பண்ணலாம்னு சொன்னார். ஓம் சக்தினு ஒரு கதை. அந்தை கதைகூட என்னோட கதை இல்லை. துரை டைரக்டர் எழுதினது. ஸ்கிரீன் பிளே முத்துராமன், அந்த கதையை ரெடி பண்ணிட்டேன். ஒரு பயங்கரமான மோசமான கிராமத்தில் இருக்கிற ஜமீந்தாரின் ஒரே புள்ளை, அட்டூழியம் பண்றதுனா அப்படி அட்டூழியம் பண்ணுவான். அதாவது அடிக்கிறது, கொலை பண்றது, பெண்களை சீரழிக்கிறதுனு ஒரு கேரக்டர். அப்போது ரொம்ப பேர் விஜயகாந்த் கிட்ட போய், நீங்க இப்போ பெரிய ஹீரோ இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் பண்ணாதீங்கனு அட்வைஸ் பண்ணாங்க. நான் சொன்னேன், ஒரு ஹீரோனா எல்லாவிதமான கேரக்டரும் பண்ணனும். அவந்தான் ஒரு ஹீரோ. அவர் சரிங்க சார், மத்தவங்க எல்லாம் என்ன சொல்றாங்களோ தெரியாது. நாம் பண்றோம். இது உங்களுக்கும் எனக்கும் ஒரு எக்ஸ்பெரிமெண்ட்டல் பண்ணி பார்ப்போம் சொன்னார்.

அதுக்கு ஹீரோயின் யாருனா மேனகா. அதாவது, கீர்த்தி சுரேஷின் அம்மா. கோயில் வேலை செய்கிற, அம்மனுக்கு பணிவிடை செய்கிற ஒரு பொண்ணு. சில நேரத்தில் அம்மனாகவே மாறிவிடும். அந்த கேரக்டருக்கு சூட்டாக இருந்தார்.

இப்படி ஒரு கதையை ரெடி பண்ணிட்டோம். ஹீரோ, ஹீரோயின் எல்லாம் புக் பண்ணிட்டோம். மற்ற கேரக்டருக்கு ஆள் எல்லாம் செலக்ட் பண்ணிட்டோம். பொள்ளாச்சிப் பக்கத்தில சூளைக்கல்னு ஒரு கிராமம். சூளைக்கல் தங்கம்னு ஒருத்தர். தங்கம் என்ற பேருக்கு ஏத்த மாதிரி தங்கமான ஒரு மனுஷன். அப்போது அவர் தலைவராக இருந்தார். அவர் வீட்லயே எங்களுக்கு இடம் கொடுத்தார். நான் குழந்தை சோபா எல்லோரும் அவர் வீட்டில்தான் தங்கி இருந்தோம். 30-35 நாள் அங்கே சூட்டிங் நடக்குது. அதற்கு அப்புறம் அந்த படம் ரிலீஸ் ஆச்சு. எல்லோரும் சொன்ன மாதிரி விஜயகாந்த் பெர்ஃபார்மன்ஸ் நல்லா இருந்தது. ஆனால், படம் பெரிய ஹிட் ஆகல. விஜயகாந்த் கிட்ட நான் இன்னொரு பெரிய ரசிக்கிற விஷயம் என்ன தெரியுமா? ஏழை, பணக்காரன், வசதியானவன், வசதி இல்லாதவன், பெரிய டைரக்டர், சின்ன டைரக்டர் அப்படியெல்லாம் அவரிடம் கிடையாது. எல்லார்கிட்டயும் ஒரே மாதிரி

அவுட்டோர் எல்லாம் போவோம் நாங்க, ஊட்டிக்கு அவுட்டோர் போறோம்னு வச்சுக்கோங்க, சூட்டிங் முடிஞ்சா அவருக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கிறோம். நீதியின் மறுபக்கம் என் சொந்தபடம்தான். அவரும் ராதிகாவும் நடிக்கிறாங்க. சூட்டிங் முடிச்ச உடனே அவருடைய ரூம்ல ஒரு பெரிய டபுள் காட் இருக்கும். அதுல வரிசையா உக்காந்துக்குவோம்.

அவரு, நான், மேக் அப் அசிஸ்டண்ட், காஸ்டியுமர், காஸ்டியுமர் அசிஸ்டண்ட், டிரைவர், அத்தனை பேரையும் சுற்றி உக்கார வச்சிக்கிட்டு சீட்டு விளையாடுவார். ஒரு வேடிக்கையான அனுபவம் உண்டு. டெய்லி, அந்த சீட்டாடும்போது என்ன பண்ணுவார்னா, தோத்துகிட்டே இருப்போம். ஒருதரம்கூட அவ ஜெயிச்சு நான் பார்த்ததே இல்லை. பல நாள் பல படங்கள் பார்த்துட்டு, பல அனுபவங்கள் பார்த்துட்டு, விஜய்காந்த் கிட்ட கேட்கிறேன். விஜய் நானும் பாக்கிறேன். நீ சீட்டாடுற சீட்டாடி தோத்துக்கிட்டே இருக்கற, ஜெயிக்கலியே, அதற்கு அவர், சார் நான் ஜெயிக்கறதுக்காக சீட்டாடல பசங்களுக்கு குடுக்கறதுக்காகத்தான் சீட்டாடுறேன். என்ன சார் இருக்கு, நாமதான் சம்பாரிக்கிறோம் இல்ல. குடுப்போம் சார் என்பார். அப்படி, நல்ல மனசு.

இன்னொரு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லனும். அவர் படத்தில மட்டும் ஹீரோ இல்ல. நிஜ ஹீரோ. ஏன்னா அவர் ஒரு 30-40 படம் பண்ண பிறகு, ஒரு நாள் என்ன பண்றார்னா, நைட் சூட்டிங். ரெண்டு பேரும் சூட்டிங் முடிச்சுட்டு வந்துகிட்டு இருக்காங்க. சென்னை டி நகர்ல பனகல் பார்க் பக்கத்துல, நாலு பக்கமும் ரோடு. அதுல உஸ்மான் ரோட்டுல இருந்து லெஃப்ட் திரும்பற இடத்துல, ஒரு மனுஷன 4 பேர் கையில அருவால வச்சிக்கிட்டு துறத்திக்கிட்டு போறாங்க. 4 பேரும் துறத்திக்கிட்டு ஓடுறாங்க. அந்த ஆளு தலை தெறிக்க ஓடுகிறார். எதிர்ல் விஜயகாந்த் கார்ல வருகிறார். டப்னு காரை நிறுத்தினார். காரில் இருந்து இறங்கினார். அவனுங்க எதிரில் நிற்கிறார். அவர்கள் 4 பேர் கையில் ஆயுதங்கள் இருக்கிறது. அவர் கையில ஒன்னும் இல்ல. தைரியமா நிற்கிறார். அவனுங்க கையில ஆயுதங்கள் இருக்கு. ஏதாவது வெட்டியிருந்தானுங்கள்னா என்னா ஆயிருக்கும். என்ன அடிச்சார் பாருங்க அத்தனை பேரையும். அடிச்சி அத்தன பேரையும் போலீஸ் ஸ்டேஷன்ல ஹேண்ட் ஓவர் பண்ணாரு. அந்த டைம்ல சோசியல் மீடியா எல்லாம் அப்ப கிடையாது. டப்பு டப்புனு வைரல் ஆகுது. அடுத்த நாள் பேப்பர்ல வருது. நியூஸ்ல சொல்றாங்க. அவரு உண்மையான ஹீரோ. சாதாரண ஒரு ஆளு அதை எல்லாம் பண்ணிட முடியாது” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Director sa chandrasekar shares vijayakanths unknown face and character

Best of Express