சிலம்பரசன் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் கடைசி நேரத்தில் குழப்பத்திற்கு பிறகு நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பல தியேட்டர்களில் அதிகாலை மற்றும் முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட பிறகும் ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர்.
இதனால், மாநாடு, மாநிலம் முழுவதும் நல்ல ஓபனிங் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. மாநாடு படம் தொடக்க நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ 8.40 கோடி வசூலித்தது.
இதன் காரணமாக ‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’, மற்றும் ‘கர்ணன்’ படங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் 4வது சிறந்த ஓப்பனிங் டே பாக்ஸ் ஆபிஸாக மாநாடு இடம்பிடித்தது.
பல நாட்களைத் தாண்டியும் தற்போதுவரை பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை முன்னிட்டு, இன்று சென்னையில் மாநாடு படத்தின் வெற்றிவிழா கூட்டம் நடந்தது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, எஸ்.ஜே சூர்யா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் சிம்பு மட்டும் விழாவில் பங்கேற்கவில்லை. அவர் வேறொரு பட ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசுகையில், ஒரு படத்தின் வெற்றி கடைசியில் அந்தப் படத்தின் ஹீரோவுக்குத்தான் போய்ச் சேரும். ஒரு நல்ல கதை, நல்ல திரைக்கதை யாரையும் உச்சத்துக்குக் கொண்டு சேர்த்துவிடும். இந்தப் படம் இதன் ஹீரோவை ரொம்ப நாட்களுக்குப் பிறகு உயரத்தில் கொண்டுபோய் அமர வைத்திருக்கிறது.
இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பம். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். அவரை நம்பி தயாரிப்பாளர் எவ்வளவு முதலீடு செய்திருக்கிறார்? அப்படிப்பட்ட ஒரு வெற்றியைக் கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்கவேண்டும்.
படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதான் இன்னொரு வெற்றி கிடைக்கும். வெற்றி வந்தபிறகு தலைகணம் இருக்ககூடாது என்று சிம்புவை கண்டிக்கும் விதமாக பேசினார்.
படத்துக்கு படம் பிளாக்பாஸ்டர்களை கொடுத்த சிம்பு, ஒருகட்டத்தில் எதுவுமே இல்லாமல் இருந்தார். எந்த சினிமாவில், தனது சிறுவயதிலிருந்து ஒரு பகுதியாக இருந்தாரோ அதிலிருந்து விலக்கப்பட்டார்.
பெரிய இடைவெளி மற்றும் போராட்டங்களுக்கு பிறகு இப்போதுதான், சிம்பு தனது கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். ஷூட்டிங் இல்லாமல் இருந்தபோது பெற்ற உடல் எடையை குறைப்பதில் இருந்து, சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுக்கும்வரை, அவர் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சிம்புவை விமர்சிக்கும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரின் இந்த பேச்சு சிம்பு ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“