சசிகுமார் அத்தை மகனான அசோக் குமார் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக இருக்கும் பைனான்சியர் அன்புச் செழியனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி அன்புச் செழியனுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “எம்.ஜி.ஆர், சிவாஜி, போல் இல்லை இன்றைய நடிகர்கள். அன்பு செழியன் போன்ற உத்தமர்கள் ஏனோ தவறாக சித்தரிக்கப்பவது வேதனை. நான் நியாயத்தின் பக்கமே” என்று குறிப்பிட்டு இருந்தார். அசோக் குமாரின் தற்கொலையால் திரையுலகமும், பொதுமக்களும் அதிர்ச்சியில் இருந்த நிலையில், சீனு ராமசாமியின் இந்த அறிக்கை மேலும் அவர்களை குழப்பத்திற்கு உள்ளாகியது.
இதைத் தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு, விஜய் ஆண்டனி, தேவயானி, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து பைனான்சியர் அன்புச் செழியனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டனர்.
ஆனால், திடீரென ‘அன்புச் செழியன் உத்தமன்’ என பதிவிட்டிருந்த ட்வீட்டை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில், “அசோக்குமாரின் துக்ககரமான முடிவால் நெஞ்சடைத்து நான் உறைந்தேன். என் குடும்பத்திலும் இது போன்ற இழப்புண்டு. இதற்கு ஆறுதல் எல்லோராலும் சொல்ல முடியாது. 70 வருடமாக, சினிமாவை பைனான்சியர்கள் தான் இயக்கி உள்ளனர். அரசு லோன் கிடையாது. ஒரே ஒரு முறை விமான நிலையத்தில் மட்டும் தான் அன்புச் செழியனை நான் சந்தித்தேன். அவ்வளவுதான். அவரை அவ்வளவு தான் எனக்கு தெரியும்” என்று சீனு ராமசாமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் ,’உழைப்பாளி அசோக்கின் பிரிவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ‘அன்புச் செழியன் உத்தமன்’ என குறிப்பட்ட சீனு ராமசாமி இப்போது, ‘ஒருமுறை தான் அன்புச் செழியனை பார்த்துள்ளேன்… அவரைப் பற்றி அவ்வளவு தான் தெரியும்’ என கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இன்று காலை பதிவிட்ட இந்த ட்வீட்டையும் சீனு ராமசாமி தற்போது நீக்கிவிட்டார்.

‘அன்புச் செழியன் உத்தமன்’ என்று கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதில், எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால், ஏன் அந்த ட்வீட்டை நீக்கவேண்டும்? இப்போது மீண்டும் தனது நிலைப்பாட்டை மாற்றி ட்வீட் போட்டு, அதையும் ஏன் சீனு ராமசாமி நீக்க வேண்டும்?
யாருடைய வற்புறுத்தலின் பேரில் ட்வீட் போட்டுவிட்டு, யாருடைய அழுத்தத்தின் காரணமாக ட்வீட்களை உடனே நீக்குகிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
அவர் மட்டுமல்ல, அன்புச் செழியனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அனைவர்களும், சிலரின் வற்புறுத்தலின் பேரில் தான் பேசியுள்ளனர் என கூறப்படுகிறது.
‘நெருப்பில்லாமல் புகையாது’ என்பது மட்டுமே இங்கு நிதர்சன உண்மை!.