இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லரில் வேள் பாரி நாவலில் இருந்து காட்சித் திருட்டு செய்யப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார். காட்சித் திருட்டு செய்யப்பட்டது, கங்குவா-விலா அல்லது வேட்டையன் படத்திலா? இயக்குநர் ஷக்கரின் கோபம் யார் மீது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த இந்தியன் - 2 திரைப்படம் வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.
இயக்குநர் ஷங்கர் அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டுக்குள் இந்த இரண்டு படங்களின் பணிகளையும் முடித்து திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவல் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அனைவரின் கவனத்திற்கு... பலரும் சு. வெங்கடேசனின் நாவலான ’வீரயுக நாயகன் வேள்பாரி’யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன்.
நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால், வேள் பாரி நாவலில் இருந்து காட்சி திருடப்பட்டதாக ஷங்கர் குறிப்பிட்ட அந்த சமீப ட்ரெய்லர் அண்மையில் ட்ரெய்லர் வெளியான தேவரா படமா அல்லது சூர்யாவின் கங்குவாவா அல்லது ரஜினியின் வேட்டையனா எது? இயக்குநர் ஷங்கரின் கோபம் யார் மீது என ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“