அமலாக்கத்துறையினரால் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது தரப்பு விளக்கத்தை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான திரைப்படம் எந்திரன். சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம், அறிவியல் புனைவு கதைக்களத்தில் அமைந்திருந்தது. அப்போதைய காலகட்டத்தில் பெரும்பொருட் செலவில் உருவான எந்திரன் திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்றை பெற்றது.
இதைத் தொடர்ந்து கடந்த 2011-ஆம் ஆண்டில், தன்னுடைய கதையை திருடி இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தை எடுத்ததாக, பிரபல பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான ஆரூர் தமிழ்நாடான் வழக்கு தாக்கல் செய்தார். குறிப்பாக, இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனக் கூறி எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
இந்த சூழலில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் அமலாக்கத்துறையின் நடவடிக்கையை கண்டித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் என்னுடைய 3 அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. எந்திரன் திரைப்பட விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்த போதிலும், அமலாக்கத்துறையின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தால் முழுமையாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணித்து, எனது சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுத்துள்ளது. தங்களது நடவடிக்கையை அமலாக்கத்துறையினர் திரும்பப் பெறாவிட்டால் மேல்முறையீடு செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.