இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தனது படங்களில் வில்லன்கள் வெறும் அடியாட்களாக இல்லாமல், அவர்களுக்கும் தனித்தன்மை வாய்ந்த முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, நடிகர் கலாபவன் மணி அவர்களின் நடிப்பு திறனை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
குத்து திரைப்படம், 2004 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு காதல் மற்றும் அதிரடித் திரைப்படம். தெலுங்கில் வெற்றி பெற்ற "தில்" என்ற திரைப்படத்தின் மறுவுருவாக்கமான இந்தப் படம், இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நடிகையின் அப்பா மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் கலாபவன் மணி நடித்து இருப்பார்.
கலாபவன் மணி, மலையாள சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அவர், நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தமிழ் சினிமாவில், இவருடைய அசைக்க முடியாத நடிப்புத் திறனை முதன்முதலில் கண்டறிந்தவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ் தான். 'ஜெமினி' திரைப்படத்தில் கலாபவன் மணி ஏற்ற கதாபாத்திரம், வெங்கடேஷுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்றதொரு கதாபாத்திரத்தை தனது படத்தில் நடிக்க வைக்க, அவரைச் சந்திக்க கொச்சிக்குச் சென்றார். ஆனால், அவரைச் சந்திக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு, கலாபவன் மணி சென்னை வந்தபோது, வெங்கடேஷ் அவரைச் சந்தித்து தனது படத்தில் நடிக்க ஒப்புதல் பெற்றார்.
வெங்கடேஷ் இயக்கிய குத்து திரைப்படத்தில், கலாபவன் மணி ஏற்ற கதாபாத்திரம் மிகவும் தனித்துவமானது. ஒரு காட்சியில், கதாநாயகன் கதாநாயகியை கடத்திச் சென்று, பின்னர் வில்லனின் அடியாட்களைத் தாக்குவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் காட்சி சாதாரணமாக இல்லாமல், மாஸாக இருக்க வேண்டும் என்று வெங்கடேஷ் விரும்பினார். இதைக் கேட்ட கலாபவன் மணி, இந்தக் காட்சியை மேலும் சிறப்பாக மாற்றுவதற்காக தானே முழுமையாக முயற்சி செய்தார்.
https://www.facebook.com/watch/?v=626133206601975
அந்தக் காட்சியில், கலாபவன் மணி தன் வீட்டில் பூஜை செய்து, அடியாட்களுக்கு திருநீர் வைத்து, தீபம் காட்டிய பிறகு அவர்களைத் தாக்குவார். இந்தக் காட்சி முற்றிலும் கலாபவன் மணியின் ஐடியா தான் என்றும், இது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததாகவும் வெங்கடேஷ் கூறினார். குத்து திரைப்படத்திற்குப் பிறகு, வெங்கடேஷ் மற்றும் கலாபவன் மணி இடையேயான நட்பு மேலும் வலுப்பட்டது. வெங்கடேஷ் இயக்கத்தில், கலாபவன் மணி பல படங்களில் நடித்தார். அவர்களின் இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களுக்கு வழிவகுத்தது.