தமிழக தேர்தல்களம் வெகுவாக சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது கூட்டணியை முடிவு செய்து, அதற்கான தொகுதிப் பங்கீடுகளுக்கும் இறுதி வடிவம் கொடுத்து விட்டனர்.
இதற்கிடையே நடிகர் கமல் ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த், பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார் பிரபல இயக்குநர். ஆம்! இயக்குநர் சுசீந்திரன், ”40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி, உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என கடிதம் ஒன்றை எழுதி, அஜித்தின் புகைப்படத்துடன் அதனை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
சுசீந்திரனின் இந்த ட்வீட்டுக்கு ’எங்களுக்கு அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ என பதிலளித்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். அதோடு, #அரசியல்வேண்டாம்அஜித்தேபோதும் என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
அஜித் இதற்கு என்ன பதிலளிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளவும் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்திருக்கிறது.