மும்பையில் தவித்த தமிழர்கள்: ஊர் திரும்ப உதவிய ஐஏஎஸ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன்...

மகாராஷ்டிரா மாநிலத்தில் வேலை செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 90 பேர் சொந்த ஊர் திரும்புவதற்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பிரபல இயக்குனர் சுசி கணேசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் பொது முடக்கம் அமலில் இருந்து வருகிறது. பொது முடக்கம் இதுவரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. திடீரென பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு புலம்பெயர்ந்து சென்று வேலை செய்துவந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ஆங்காங்கே சிக்கிக்கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளும், சில தன்னார்வலர்களும் உணவு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றே விரும்புகின்றனர். அதனால், பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசு, சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.

இந்தநிலையில், பொது முடக்கத்திற்கு முன்பு மதுரை மற்றும் விருதுநரைச் சேர்ந்த 90 பேர் மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பைக்கு வேலை செய்ய சென்றனர். பொது முடக்கத்தால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் 2 மாதங்களாக மும்பையில் சிக்கித் தவித்து வந்தனர். அவர்கள் பற்றி மும்பையில் வசித்து வரும் தமிழ் சினிமா இயக்குனர் சுசி கணேசன் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ முயற்சி செய்துள்ளார்.

மும்பையில் சிக்கித் தவிக்கும் 90 தமிழர்களைப் பற்றி அறிந்த இயக்குனர் சுசி கணேசன் அவர்களை மீட்பதற்காக, அம்மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகனைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளார். அவரும் உடனடியாக அந்த 90 பேர்களும் சொந்த ஊர் திரும்ப உதவி செய்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அன்பழகன் தனது பிஸியான வேலைகளுக்கு மத்தியில் உதவி செய்தது குறித்து இயக்குனர் சுசிகணேசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “ஐஏஎஸ் என்பது கவர்ச்சியான பதவி அல்ல. களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாய் பதிய வைத்த சம்பவம் இது” என்று நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குனர் சுசி கணேசன் தனது ஃபேஸ் புக் “ஐஏஎஸ் அதிகாரியின் அயராத முயர்ச்சி” என்று குறிப்பிட்டிருப்பதாவது, “மும்பையில் இட்லி வியாபாரம் செய்யும் மதுரை , விருதுநகர் – ஐ சேர்ந்த சுமார் 90 தமிழர்கள் , covid-19 காரணமாக , தொழிலை இழந்து, ஊர் திரும்புவதற்கு தமிழக அரசின் e pass வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாக நண்பர் கோவிந்தன் தொடர்பு கொண்டு கவலையோடு பேசினார் . உதவுவதற்கு இங்கே ஒருவர் இருக்கிறார். உடனே விபரம் அனுப்புங்கள் என்றேன். அந்த ஒருவர் : திரு அன்பழகன் ஐஏஎஸ். என் செய்தி கிடைக்கப்பெற்றதும் அடுத்த நொடி , அவரிடம் இருந்து வந்த செய்தி டோக்கன் நம்பரை அனுப்புங்கள் என்று பதில் அனுப்பினார். அரசின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிற முக்கிய துறைகளின் ஒன்றான MIDC – CEO வேலைகளுக்கு நடுவே அவர் காட்டிய வேகம் என்னை பிரமிக்க வைத்தது.

தமிழக அரசு அதிகாரிகளோடு தொடர்புகொண்டு , அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் சம்பத்தப்பட்டவர்களிடமிருந்து அழைப்பு: “சார், 3 பஸ் வந்துவிட்டது .. எல்லோரும் ஏறி அமர்ந்து விட்டார்கள் மிகவும் கலக்கத்தோடு இருக்கிறார்கள்.. சீக்கிரம் கிளம்பாவிட்டால் , டிரைவர்கள் கிளம்பி விடுவார்கள். மீண்டும் அன்பழகன் வாட்ஸ்அப்பில் பதில் இல்லை.. கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக்கொன்றிருந்த பத்தாவது நிமிடத்தில் , சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து போன் வந்தது. “சார் பாஸ் கிடைத்து விட்டது . எல்லோரும் கிளம்புகிறார்கள்” என்று சந்தோஷமாக நன்றி சொன்னார்கள் . வந்த நன்றிகளை அன்பழகனுக்கு திருப்ப வாட்ஸ்அப்பை திறந்தால் – 3 பஸ் பாஸ்களை ஃபார்வர்ட் செய்திருந்தார். வாயாற நன்றி சொல்லிவிட்டு தூங்கப் போனேன். கதை இங்கே முடியவில்லை என்பது , அடுத்த நாள் விடியும் போதுதான் தெரிந்தது . அதே கோவிந்தன் மீண்டும் பட்டமான குரலில் பேசினார். பாஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் , எல்லோரும் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு வித பயம் காரணமாக டிரைவர்கள் 3 பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு ஓடி போய்விட்டார்கள்… என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்… திரும்பவும் 3புதிய பஸ்களை ஏற்பாடு செய்கிறோம் … இன்றே பாஸ் வாங்கி இவர்களை இன்றே அனுப்பாவிட்டால் மீண்டும் நேற்றைய நிலைமை ஏற்பட்டுவிடும்… பழைய பாஸ் பயனில்லாமல் போய்விட்டது” என்றார்.

பாஸ் என்பதை தாண்டி , பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டவர்களின் பதைபதைப்பும், விடைதெரியாத மனக்குழப்பமும் கண்ணில் ஆடியது. மீண்டும் நடந்து விட்ட சோகத்தை அன்பழகனுக்கு விவரித்தேன… அயரவில்லை அவர் மீண்டும் அனுப்புங்கள் என்றார். மீண்டும் 3 பஸ்களின் விபரத்தை அனுப்பினேன். அவரது பதில் உடனடியாக அனுப்புகிறேன் மீண்டும் நேற்றைய நடைமுறைகள்… கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பதட்டம் இந்த பக்கம்.

“நாம் பாஸ் பெற்றுவிட்டோம். நான் விபரங்களை மாநில நோடல் அதிகாரிக்கு அனுப்புகிறேன்” என்று அந்த பக்கம் அந்த அவர் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார். இரண்டு மணி நேரத்தில் , “பாஸ் கிடைத்துவிட்டது… மதுரைக்கும் , விருதுநகருக்கும் மக்கள் கிளம்புகிறார்கள்” என்றதும் , இரண்டாவது முறை நன்றி சொல்வதற்காக மீண்டும் அழைத்தேன் .. .. பிஸி … பிறகுதான் தெரிந்தது – புனே யிலிருந்து ரயிலில் கிளம்பும் 1200 தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார் என்பது. பிறகு, அவரிடம் பேசியபோது, நீங்கள் கேட்டதும், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரி பூஜா கிர்லோஸுக்கு உங்கள் மெசேஜை பார்வட் செய்தேன். அவர் உடனடியாக உதவினார். அவருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

ஐஏஎஸ் என்பது கவர்ச்சியான பதவி அல்ல… களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாய் பதிய வைத்த சம்பவம் இது. நன்றிகள் பல அன்பழகன் bro…” என்று இயக்குனர் சுசி கணேசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close