/indian-express-tamil/media/media_files/2025/09/22/t-rajendar-2025-09-22-13-38-16.jpg)
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இத்தனைக்கும் சேர்த்து முதல் பட சம்பளம் ரூ.1500: இதையும் வாங்க முடியாமல் டி.ஆர் பட்ட பாடு!
1980-களில் இயக்குநர் கே.பாலசந்தர், விசு, பாக்யராஜ் ஆகியோர் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருந்த நிலையில் தனது தனித்துவமான பாணியில் திரையுலகை கலக்கி வந்தவர் டி.ராஜேந்தர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வந்தார்.
இயக்குநர் டி. ராஜேந்தர் தனது தனித்துவமான பேச்சு மற்றும் நடிப்பு திறமையால் கவனிக்கப்பட்டார். கடந்த 1979-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு தலை ராகம்’ திரைப்படத்தின் முதல் சினிமா திரையுலகில் அறிமுகமான டி. ராஜேந்தருக்கு முதல் படமே வெற்றியை அள்ளித் தந்தது.
இப்படமே அவரை பன்முகத் தன்மையுடையவராக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது. டி. ராஜேந்தரின் திரைப்படங்கள் பெரும்பாலும் காதல், குடும்பம், சமூகப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன.
அவரது திரைப்படங்களில் வரும் வசனங்கள், பாடல்கள், படமாக்கும் முறைகள் ஆகியவை தனித்துவமான பாணியைக் கொண்டிருந்தன. எதுகை-மோனையில் உரைநடையை அவர் பிரபலப்படுத்திய அளவுக்கு வேறு எவராலும் செய்ய முடியாது.
அது மட்டுமல்ல, அவருடைய படங்களில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகளை அவர் தொடாமலே நடிப்பார். டி. ராஜேந்தர் இசையமைத்த பாடல்கள் அவரது தனித்துவமான பாணியால் வெகுஜனங்களைக் கவர்ந்தன.
அன்றைய பிரபலக் கவிஞர்களை மிஞ்சும் அளவுக்கு அவருடைய பாடல் வரிகள் இருக்கும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'ஒருதலை ராகம்’ படத்தில் அவர் படத்தின் நாயகனுக்கு எழுதிய பாடல்கள் தான். இப்படி பல புகழை பெற்ற இயக்குநர் டி.ராஜேந்தர் தனது முதல் படத்திற்கு பெற்ற சம்பளம் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “1979-ல் வெளியான ‘ஒரு தலை ராகம்’ படத்தில் இடம்பெற்றிருந்த ’என் உயிர் ரோசா எங்கடி போற’ இந்த பாட்டில் தான் நான் அறிமுகமானேன். இந்த படத்தில் எனக்கு சம்பள பிரச்சனை இருந்தது.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல துறைகளில் பணியாற்றி இருந்தாலும் முதல் படத்தில் எனக்கு சம்பளம் வரவில்லை. சம்பளத்திற்காக யூனியனில் போய் நின்றேன். படம் வெளியான அன்று படம் பார்ப்பதற்கு கூட எனக்கு வழி இல்லை. அவ்வளவு கஷ்டத்தில் இருந்தேன்.
அன்று எனக்காக சினி மிசிசியன் யூனியன் குரல் கொடுத்தது. அதற்காக தான் நான் வந்தேன். அதை என்றும் நான் மறக்கமாட்டேன். அன்று கதை, திரைக்கதை, வசனம், பாடல் என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்து எனக்கு வெறும் 1500 ரூபாய் தான் சம்பளமாக கிடைத்தது.
அந்த சம்பளத்தை வாங்குவதற்கு பல கஷ்டங்களை சந்தித்தேன். அந்த படத்தில் எல்லோருக்கும் ஷீல்ட் கிடைத்தது. எனக்கு எதுவும் கிடைக்கவில்லை” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.